Published : 08 Sep 2023 05:06 AM
Last Updated : 08 Sep 2023 05:06 AM
திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றபோது அந்த குடும்பத்தை சேர்ந்த கவுஷிக் என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது. ஆனால் அருகில் இருந்தவர்கள் சிறுத்தையை விரட்டியதால் அச்சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பினான்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 11-ம்தேதி இரவு, நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6) எனும் சிறுமியை அதே பகுதியில் சிறுத்தை கவ்விக் கொண்டு ஓடியது. மறுநாள் இச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கிடையில் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. இதில் இதுவரை 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கின.
இந்நிலையில் அலிபிரி மலைப்பாதையில் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில், அதாவது 7-வது மைல் பகுதியில் 5-வது சிறுத்தை நேற்று அதிகாலையில் கூண்டில் அகப்பட்டது.
கூண்டில் சிக்கிய இந்த 3 வயது பெண் சிறுத்தையை வனத்துறையினர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். கடந்த 75 நாட்களில் பிடிபட்ட 5-வது சிறுத்தை இது என்று வனத்துறையினர் கூறினர்.
இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT