Published : 07 Sep 2023 07:37 PM
Last Updated : 07 Sep 2023 07:37 PM
புதுடெல்லி: இந்தியா என்ற பெயர் ஆங்கிலப் பெயர் என கூறும் பாஜக தனது கட்சியின் பெயரில் உள்ள எழுத்தை மாற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பரந்த மனப்பான்மை கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்கான பொது மொழியை, மனிதாபிமானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதினாலும், குறுகிய மனப்பான்மை கொண்ட பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மொழியை அடிமைத்தனத்தின் அடையாளமாக மாற்ற விரும்புகின்றன. அப்படி என்றால், பாஜக தனக்கான சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் பெயரில் இருக்கும் party என்ற வார்த்தையை முதலில் அகற்ற வேண்டும். பார்ட்டி (Party) என்பதை இந்திய மரப்புப்படி மாற்ற வேண்டுமானால் ‘தள்’ (dal) என்று மாற்ற வேண்டும். எனவே, Bharathiya Janatha Party (BJP) என்பது Bharathiya Janatha Dal (BJD) என மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இண்டியா என கூட்டணிக்கு பெயர் வைத்ததால் தற்போது நாட்டின் பெயரை பாரத் என அழைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஒருவேளை எங்கள் கூட்டணியின் பெயர் பாரத் என அழைக்கப்பட்டால், பாஜக என்ன செய்யும்?" என கேள்வி எழுப்பி உள்ளார். இதனிடையே, இந்தியா தனது பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பாக கோரிக்கை வைத்தால், அதனை ஐக்கிய நாடுகள் சபை பரிசீலிக்கும் என ஐ.நா உயர் அதிகாரி ஒருவர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT