Published : 07 Sep 2023 05:46 PM
Last Updated : 07 Sep 2023 05:46 PM
கொல்கத்தா: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்திம் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த போலீசாரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனுமதி கோரியுள்ளது. அடுத்த மாதம் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் மூன்று இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வீட்டின் முன்பு, கிரிஷி பவன் ஆகிய மூன்று இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டி, நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் ஆக.31-ம் தேதி அனுமதி கேட்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மூன்று கடிதங்களை எழுதியுள்ளார்.
முன்னதாக, செப்.30 முதல் அக்.4 வரை டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திரிணமூல் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க அமைச்சர் ஷஷி பஞ்சா கூறுகையில், “கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பாரதி ஜனதா கட்சி, இப்போது பழிவாங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட நிதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்" என்று கூறினார்.
மேலும், “உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி போலீஸ் அறிக்கை அளித்தும், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம். இது ஜனநாயக விரோதமானது. திரிணமூல் காங்கிரஸ் இதற்கு எதிராக போராட்டம் நடத்தும்" என்றார்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம், மேற்கு கொல்கத்தாவில், நிதி விடுவிக்காததைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அப்போது அடுத்த முறை பிரதமர் மோடி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அனுமதி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த சமிக் பட்டாச்சாரியா கூறுகையில், “திரிணமூல் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது டெல்லி போலீஸாரின் கையில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பேரணி நடத்துவதற்கு கூட நீதிமன்றத்தை நாட வேண்டியது இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT