Published : 07 Sep 2023 07:05 AM
Last Updated : 07 Sep 2023 07:05 AM
புதுடெல்லி: ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றதை தொடர்ந்து இதன் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில், தனியார் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பொதுவாக, முந்தைய ஆட்சியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை டெல்லிக்கு வெளியே நடத்த தயங்கினர். குறிப்பாக இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு தலைவர்கள் டெல்லி அல்லது குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமே பயணம் செய்வது வழக்கமாக இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பல தலைவர்களை நாட்டின் வெவ்வெறு நகரங்களில் சந்தித்துப் பேசி உள்ளேன்.
கடந்த 2015-ல் இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை பெங்களூருவில் சந்தித்துப் பேசினேன். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் (2018) மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (2015) ஆகியோரை வாரணாசியில் சந்தித்துப் பேசினேன்.
இதுபோல போர்ச்சுகீசிய அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவை (2020) கோவா மற்றும் மும்பையிலும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை (2018) சாந்திநிகேதனிலும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹொலாந்தை (2016) சண்டிகரிலும் சந்தித்துப் பேசினேன்.
எதிர்க்கட்சிகள் ஆளும்... இதுதவிர, பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகள் டெல்லிக்கு வெளியே நடைபெற்றுள்ளன. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட இந்த சந்திப்புகள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது, நாட்டு நலன் என்று வரும்போது கூட்டாட்சி தத்துவத்தில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதே உணர்வை ஜி20 தலைமைத்துவத்திலும் காண முடியும். ஜி20 அமைப்பின் பல்வேறு துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்கள் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 60 நகரங்களில் நடைபெற்றன. இதில் 125 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாடு முழுவதும்உள்ள மக்களில் குறிப்பாக இளைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்கான முதலீடாக ஜி20 தலைமைத்துவம் அமைந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT