Published : 07 Sep 2023 07:42 AM
Last Updated : 07 Sep 2023 07:42 AM

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடக்கிறது? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

வரும்18-ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீங்கள் கூட்டியுள்ளீர்கள். இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை வெளியிட வேண்டும். சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படுவதன் நோக்கம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அந்த 5 நாட்களும் அரசின் பணிகளுக்கு ஒதுக்கப்படும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அக்கறை மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப இது வாய்ப்பு அளிக்கும் என்பதால், இந்தச் சிறப்புக் கூட்டத் தொடரில் கண்டிப்பாக கலந்து கொள்ள இருக்கிறோம். ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பின் அடிப்படையில் உரிய விதிமுறைகளின் கீழ் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

இந்தக் கூட்டத்தில் 9 பிரச்சினைகளை நாங்கள் எழுப்பவுள்ளோம். அவை:

அத்தியவாசிய பொருள்களின்விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை மற்றும் சிறு, குறு தொழில்கள் மீதான அழுத்தம் ஆகியவற்றுடன் கூடிய தற்போதைய பொருளாதார நிலை.

விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு எம்எஸ்பி தொடர்பாகவும், விவசாயிகளின் பிற கோரிக்கைகள் தொடர்பாகவும் இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள். அதானி குழுமத்தின் அனைத்துசெயல்பாடுகளையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை.

மணிப்பூர் மக்கள் தொடர்ந்து சந்தித்து வரும் வேதனை மற்றும் அம்மாநிலத்தின் அரசு இயந்திரத்தின் தோல்வி மற்றும் சமூக நல்லிணக்க பாதிப்பு குறித்து விவாதம். ஹரியாணா போன்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் வகுப்புவாத வன்முறை குறித்து விவாதம்.

லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நமது எல்லைகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து இந்திய இறையாண்மைக்கு சவால்விடுவது பற்றி விவாதம். சாதிவாரி கணக்கெடுப்பின் அவசரத் தேவை.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளில் ஏற்படும் விரிசல். சில மாநிலங்களில் வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி ஏற்படுத்தியுள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்புகள்.

இந்த 9 பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் பேசுவோம். இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x