Published : 07 Sep 2023 04:43 AM
Last Updated : 07 Sep 2023 04:43 AM
புதுடெல்லி: சனாதனம் குறித்து யாராவது தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, முன்னாள் நீதிபதிகள், எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதி உள்ளனர். சனாதனம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசியது தொடர்பாக உதயநிதிமீது உத்தர பிரதேச காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி-20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஜி-20 மாநாட்டின் உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9, 10-ம்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சுகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர்கள் மட்டுமேபதில் அளிக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் இதுகுறித்து விளக்கம் அளிக்க தேவை இல்லை.
சனாதனம் குறித்து தவறாகயாராவது பேசினால் அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும். சனாதனம் குறித்த உண்மைகளை அறிந்துகொண்டு, எதிர்க்கட்சி தலைவர்களை மத்தியஅமைச்சர்கள் எதிர்கொள்ளவேண்டும். அதேநேரம், அளவுடன்எதிர்வினையாற்றுங்கள்.
வரலாற்றை ஆராயாமல், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளஉண்மை தகவலை மட்டும் பேசுங்கள். சனாதன சர்ச்சைக்கு தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள்.
இவ்வாறு மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப். 18 முதல் 22-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த ஆக. 31-ம்தேதி அறிவித்தார். ஆனால் இதற்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில், மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில்தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி முதல் புதிய நாடாளுமன்றம் செயல்படும்: செப்.18-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர், 19-ம் தேதி முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28-ம் தேதி திறந்து வைத்தார். இது ரூ.971 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 300 இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. எனினும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி பழைய கட்டிடத்தில் தொடங்கியது. இக்கூட்டத் தொடர் ஆக.11-ம் தேதி முடிந்தது.
இந்த சூழலில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி பழைய கட்டிடத்தில் தொடங்கும் என்றும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19-ம் தேதி முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT