Published : 07 Sep 2023 06:08 AM
Last Updated : 07 Sep 2023 06:08 AM

திருப்பதி மலை பாதையில் பக்தர்களுக்கு கைத்தடிகள் வழங்கும் திட்டம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதி சேஷசாசலம் வனப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தை கள், கரடிகளின் நடமாட்டம் அதிக ரித்து விட்டது. கர்னூலை சேர்ந்த கவுஷிக் (3) எனும் சிறுவன் சிறுத்தை தாக்கி காயங்களுடன் உயிர் பிழைத்தான். அதன்பின் நெல்லூரை சேர்ந்த லக்‌ஷிதா (6) எனும் சிறுமியை சிறுத்தை அடித்து கொன்றது. இதையடுத்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மதியம் 2 மணிக்கு பிறகு அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் அனுமதி இல்லை எனவும், அதேபோல், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திருப்பதி - திருமலை இடையே பைக்குகளுக்கு அனுமதி எனவும் திருப்பதி தேவஸ்தானம் புதிய நிபந்தனையை அறிவித்தது.

மேலும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி கைத்தடிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தை அறங்காவலர் கருணாகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கைத்தடி கையில் இருந்தால், ஒரு மனோ தைரியம் இருக்கும். சிறுத்தையும் பயப்படும். ஆனால், இதோடு நாங்கள் விட்டு விட மாட்டோம். கண்டிப்பாக ஒரு நிரந்தர தீர்வை இதற்கு காண்போம் என கருணாகர் ரெட்டி கூறினார். ஒவ்வொரு பக்தருக்கும் வழங்கப்படும் கைத்தடி, லட்சுமி நரசிம்மர் கோயிலை கடந்ததும் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என தர்மா ரெட்டி தெரிவித்தார்.

5-வது சிறுத்தை என்னவானது?: சிறுமி லக்‌ஷிதா கொல்லப்பட்ட இடத்தில் மற்றொரு சிறுத்தை உலா வருவதை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வனத்துறையினர் அறிந்துள்ளனர். இதனை பிடிக்க அப்பகுதில் கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிறுத்தை இதுவரை சிக்கவில்லை. இதுவரை 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கின. இதில் ஒன்று மட்டுமே அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது. மீதமுள்ள 3 சிறுத்தைகளும் எஸ்.வி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x