Published : 07 Sep 2023 06:16 AM
Last Updated : 07 Sep 2023 06:16 AM
புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல் சாசனத்தில் ‘பாரத்’ என்ற சொல் இடம்பெற்ற சுவாரசியமான வரலாறு வருமாறு: இந்தியாவுக்கென தனி அரசியல் சாசனத்தை உருவாக்க 1946-ம் ஆண்டு அரசியல் சாசன அவை உருவாக்கப்பட்டது. இதற்கு ராஜேந்திர பிரசாத் தலைவராக இருந்தார். இதில் 299 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்த அவை தற்காலிக நாடாளுமன்றமாக செயல்பட்டது.
பின்னர் அரசியல் சாசன வரைவை தயாரிக்க பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1948-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் வரைவை வெளியிட்டது. அதில், பிரிவு 1-ல் இந்தியா என குறிப்பிடப்பட்டது. பாரத் என்ற பெயர் இடம்பெறவில்லை.
இந்த வரைவில் பூர்வீகமான பாரத் என்ற பெயர் இடம்பெறாதது குறித்து சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதிலும், ஓராண்டுக்கு பிறகுதான் அரசியல் சாசன அவையில் இதுகுறித்த விவாதம் தொடங்கியது. அப்போது, உறுப்பினர் எச்.வி.காமத் 2 ஆலோசனைகளை வழங்கினார். முதலாவதாக “பாரத் அல்லது ஆங்கிலத்தில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என இடம்பெறலாம்” என்றார். இரண்டாவதாக, “ஹிந்த் அல்லது ஆங்கிலத்தில் இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்த நாடு என இருக்கலாம்” என்றார்.
உதாரணமாக அயர்லாந்தின் பெயர் அயர் அல்லது ஆங்கிலத்தில் அயர்லாந்து என இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார். இதுபோல, வெளிநாடுகளில் இந்துஸ்தான் என அறியப்படுவதாலும் இங்கு வசிப்போர் இந்துக்கள் என அழைக்கப்படுவதாலும் ஆங்கிலத்தில் இந்தியா என இடம்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், சேத் கோவிந்த் தாஸ், கமலபதி திரிபாதி, கல்லுர் சுப்பா ராவ், ராம் சஹாய் மற்றும் ஹர் கோவிந்த் பந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியல்சாசனத்தில் நாட்டின் பெயர் பாரத் என இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்தியா என்பது பழமையான வார்த்தை இல்லை என்றும் வேதங்களில் எங்கும் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றும் தாஸ் தெரிவித்தார். அதேநேரம் வேதங்கள், உபநிஷத்கள், மகாபாரதம் மற்றும் புராணங்களில் பாரத் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
கல்லுர் சுப்பா ராவ் கூறும்போது, “சிந்து அல்லது இந்துஸ் என்பதிலிருந்து இந்தியா என்ற பெயர் வந்திருக்கலாம். இந்துஸ் ஆறு அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ளதால் பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் இந்துஸ்தான் என்ற பெயர் பொருத்தமாக இருக்கலாம்” என்றார்.
பாரத் என்ற பெயருக்கு ஆதரவாகராம் சஹாய் கூறும்போது, “குவாலியர், இந்தூர் மற்றும் மால்வா ஆகியவை ஒருங்கிணைந்த பகுதி அனைத்து மத நூல்களிலும் மத்திய பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து இந்தி இலக்கியங்களிலும் நாட்டின் பெயர் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. நமது தலைவர்களும் தங்களுடைய உரையில் நாட்டின் பெயரை பாரத் என்றே கூறுகின்றனர்” என்றார்.
கமலபதி திரிபாதி கூறும்போது, “நாட்டு மக்களின் கவுரவம் மற்றும் உணர்வுகளுக்கேற்ப பாரத் அதாவது இந்தியா என இடம்பெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆயிரம் ஆண்டு காலமாக அடிமைப்பட்டு கிடந்ததால் இந்த நாடு தனது ஆன்மா, வரலாறு, பெருமை, வடிவம் மற்றும் பெயரை இழந்துவிட்டது.
ரிக் வேதம் மற்றும் உபநிஷத், கிருஷ்ணர் மற்றும் புத்தரின் போதனைகள், சங்கராச்சாரியா, ராமரின் வில் மற்றும் கிருஷ்ணரின் சக்கரம் ஆகியவற்றை பாரத் நினைவுபடுத்துகிறது” என்றார்.
பாரத் வர்ஷா: இதையடுத்து, அரசியல் சாசன அவையின் தலைவர் ராஜேந்திர பிரசாத்,மற்றொரு உறுப்பினர் ஹர்கோவிந்த்பந்தை பேச அனுமதித்தார். ஹர்கோவிந்த் பந்த் பேசும்போது, “நாம்தினசரி மத ரீதியிலான கடமையின்போது பாரத் வர்ஷா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.
இதையே நாட்டின் பெயராக குறிப்பிடலாம். துஷ்யந்தா மற்றும் சாகுந்தலா தம்பதி மகனின் பேரரசை பாரத் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா என்பது வெளிநாட்டினரால் வைக்கப்பட்ட பெயர். இந்த பெயரையை நாம் தொடர்ந்து வைத்துக் கொள்வது நமக்கு அவமானம்” என்றார்.
இதையடுத்து, 1949-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அரசியல் சாசன வரைவு பிரிவு 1-ல் திருத்தம் கொண்டுவந்தார் அம்பேத்கர். அதில், நாட்டின் பெயர், “இந்தியா, அதாவது பாரத் என்பது மாநிலங்கள் இணைந்த நாடு ஆகும்” என குறிப்பிடப்பட்டது.
இந்தியாவின் பெயரை மாற்றப் போவதாக கூறுவது வதந்தி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் தலைவர்களுக்கு இரவு விருந்து வழங்குவதற்கான அழைப்பிதழ் குடியரசுத்தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வழக்கமாக இந்திய குடியரசுத் தலைவர் என இருப்பதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் (பிரசிடென்ட் ஆப் பாரத்) என இடம்பெற்றுள்ளது. இதனால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறும்போது, “இது வதந்தி என கருதுகிறேன். பாரத் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் மனநிலையை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...