Published : 06 Sep 2023 03:49 PM
Last Updated : 06 Sep 2023 03:49 PM
புதுடெல்லி: இம்மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நோக்கம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அத்துடன், 9 விஷயங்களைப் பட்டியலிட்டு, அவை குறித்து இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "செப்.18-ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீங்கள் கூட்டியுள்ளீர்கள். இந்தச் சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படுவதன் நோக்கம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அந்த ஐந்து நாட்களும் அரசின் பணிகளுக்கு ஒதுக்கப்படும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான அக்கறையையும், முக்கிய பிரச்சினைகளையும் குறித்து கேள்வி எழுப்ப இது வாய்ப்பு அளிக்கும் என்பதால், இந்தச் சிறப்புக் கூட்டத் தொடரில் கண்டிப்பாக கலந்து கொள்ள இருக்கிறோம். ஆக்கபூர்வமான ஒத்துழைப்பின் அடிப்படையில் உரிய விதிமுறைகளின் கீழ் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறி 9 பிரச்சினைகளை பட்டியலிட்டுள்ளார். அவை:
இவ்வாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, வரும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும், நாட்டை இருளில் தள்ளக் கூடாது என்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், இந்தக் கூட்டத்தொடரில் அதானி விவாகரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் நடந்த இரவு விருந்து கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வரும் சிறப்புக் கூட்டத் தொடரில் கடைபிடிக்க வேண்டிய வியூகம் குறித்து விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல்முறையாக எந்த நோக்கத்துக்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்படுகிறது என்று கூறாமல் மோடி அரசு சிறப்பு கூட்டத்தைக் கூட்டுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில்... - வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும், அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு அவை பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன. பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில் மத்திய அரசு வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 11-ல் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும் அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி, அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 64,500 சதுர மீட்டர், ஒரே நேரத்தில் 1,280 பேர் அமரும் வசதியோடு இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை, மைய அரங்கம், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT