Published : 06 Sep 2023 02:57 PM
Last Updated : 06 Sep 2023 02:57 PM

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் புதிய கட்டிடத்திலும் நடைபெற வாய்ப்பு

புதுடெல்லி: வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும், அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு அவை பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன. பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில் மத்திய அரசு வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 11-ல் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போன்ற சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய கட்டிடத்திலும் அதன் பின்னர் மற்ற நாட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி, அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 64,500 சதுர மீட்டர், ஒரே நேரத்தில் 1,280 பேர் அமரும் வசதியோடு இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை, மைய அரங்கம், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x