Published : 06 Sep 2023 02:35 PM
Last Updated : 06 Sep 2023 02:35 PM
புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜிபின்ங், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது புதிது இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெறுகிறவுள்ள நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், ஜி20, இந்தியா - பாரத் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, "ஜி20 உச்சி மாநாடு நடந்த பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு நிலைகளில் சில நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என்ற முடிவினை எடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அந்நாட்டின் பிரதிநிதிகள் மூலமாக அந்நாட்டின் நிலைப்பாடு மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் மற்றவர்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கலந்து பேசி இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் உள்ளனர். ஒவ்வொருவரும் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பிரச்சினைகளுடன் வருவார்கள்.
கடந்த பல வருடங்களாக, குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கு கொஞ்சம் முன்னதாகவோ, நாடுகளுக்கு இடையேயான ஒப்பீட்டுப் பொருளாதார முக்கியத்துவம் மாறியிருக்கிறது. நாடுகளுக்கு இடையேயான அரசியல் நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.. குறிப்பாக, பெரிய அதிகாரமுடையவர்கள், குறைவான அதிகாரமுடையவர்களுக்கு இடையேயான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு இவற்றை நீங்கள் பார்த்தால், அவை ஒரு நெருக்கமான குழுக்களாக இருந்தன. குறிப்பாக, மேற்கத்திய உலகில் அவை வலுவான கூட்டணி அமைப்பைக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது உலகம் மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். ஜி20 அதற்கான சிறந்த உதாரணமாக இருக்கும்.
முன்பு ஒரு காலம் இருந்தது, நாம் அனைத்தையும் ஜி7 அமைப்பிடம் விட்டுவிட்டோம், இன்று ஜி20 அமைப்பு இருக்கிறது. அதாவது, ஜி20 உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது நடந்த மற்ற கூட்டங்களுடன் ஜி20 கூட்டத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். நேட்டோ கூட்டம், பிரிக்ஸ் கூட்டம், குவாட் கூட்டம், ஐநா கூட்டம் என எந்தக் கூட்டமும் இந்த அளவுக்கு கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனென்றால், இந்தக் கூட்டம் என்பது விதிவிலக்கான முக்கியத்துவம் வாய்ந்தது என்று இன்று உலகம் அங்கீகரிக்கிறது" என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பாரத் சர்ச்சை: ஜி20 இரவு விருந்து அழைப்பிதழில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ‘பாரதத்தின் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டது குறித்து பேசிய அமைச்சர், "இந்தியாதான் பாரத். அது நமது அரசியலமைப்பில் உள்ளது. அதனை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பாரதம் என்று கூறும்போது அதில் ஒரு பொருள், அர்த்தம் இருக்கிறது. அதனுடன் ஒரு புரிதலும் உறவும் உருவாகும். இது நமது அரசியலமைப்பிலும் பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.
இந்தியாவின் பொறுப்பு: ஜி20-ல் உலகளாவிய தெற்கின் குரல் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்துகொள்வது குறித்து பேசிய அமைச்சர், "உலகின் வேறு எந்த நாட்டின் தலைவரும், கூட்டத்தில் இல்லாத வளரும் நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிக்கவில்லை. அவர்களிடம் வாருங்கள், எங்களுடன் அமர்ந்து உங்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் அதனை பகுத்தாய்ந்து அவற்றை ஜி20 முன்வைப்போம் என்று அழைப்பு விடுக்கவில்லை. இது தனித்துவமானது. இது இந்தியாவுக்கான பொறுப்பாக நான் பார்க்கிறேன்.
மாறிவரும் இந்தக் கடினமான உலகில் நமக்கு பொறுப்பு இருக்கிறது. நீங்கள் எப்படி மக்களை ஒன்றிணைப்பீர்கள்? நம் அனைவருக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை எப்படி அனைவரையும் உணர வைப்பீர்கள், அதற்காக இந்த உலகத்துக்கு சரியானதைச் செய்ய இங்கே நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT