Published : 06 Sep 2023 08:47 AM
Last Updated : 06 Sep 2023 08:47 AM

வேளாண் விளைபொருட்களை கொண்டு எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

ஜெய்ப்பூர்: வேளாண் விளைபொருட்களை கொண்டு எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகிலுள்ள கோகமெடி பகுதியில் பாஜகவின் 4-வது பரிவர்த்தன் யாத்திரையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் உங்களுக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். கோதுமை, அரிசி, சோளம் மற்றும் கம்பு பயிரிடுவதன் மூலம் உங்கள் (விவசாயிகள்) வாழ்க்கையை மாற்ற முடியாது. எவ்வளவு உற்பத்தி செய்தாலும் விலை அப்படியேதான் இருக்கும்.

எனவே விவசாயத்தை மின்சாரம், எரிசக்தித்துறைக்கு மடைமாற்ற வேண்டும். அதுவே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கும். நாடும் வளர்ச்சி அடையும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு நல்லாட்சி புரிந்து வருகிறது. தற்போது விவசாயி என்பவர் உணவு அளிப்பவராக மட்டுமல்லாமல் ஆற்றலை வழங்குபவராகவும் இருக்க வேண்டும் என்ற புதிய சிந்தனை பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முன்பு தோன்றியுள்ளது.

கரும்பு, சோளம், அரிசி, கோதுமை ஆகியவற்றிலிருந்து எத்தனால் எடுக்கப்படுகிறது. மேலும் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டமும் தொடங்கியுள்ளது. எத்தனாலால் எந்தவித மாசுபாடும் ஏற்படாது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஏசி) எண்ணெய் நிறுவனம், ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனால் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலம் ஸ்கூட்டர்களை இயக்கலாம்.

எத்தனால் பயன்பாடு அதிகரிக்கும்போது, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவு பெருமளவு குறையும். இதன்மூலம் அந்த நிதி, கிராமங்களுக்குச் சென்று வளர்ச்சி ஏற்படும்.

கிராமங்களில் குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு, மின்சார துறையில் முதலீடுகள் குவியும். முதலீடுகள் குவியும்போது வளர்ச்சி விகிதமும் அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு வறுமை ஒழிக்கப்படும். இந்த வகையில்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிந்தித்து செயல்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தால்தான் தற்போது கிராமங்களில் சாலைகள் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இல்லாவிட்டால், யார் இந்த சாலைகளை அமைத்திருக்க முடியும்? கிராமங்களில் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டு விட்டால் கிராமப்புற குழந்தைகள் பள்ளிகளுக்கு எளிதில் செல்ல முடியும். கிராமங்களில் விளையும் காய்கறிகள், பூக்கள், பழங்கள் எளிதில் நகர்ப்புறங்களை அடையும். இதனால் கிராமமே வளர்ச்சியுறும்.

எனது தலைமையிலான அமைச்சகத்தால் நாட்டில் நெடுஞ்சாலைகள் அதிகம் வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானிலும் நெடுஞ்சாலைகள் மேம்பாடு அடைந்துள்ளன. மக்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.

எனவே, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இதனால் புல்லட் ரயில் போல மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும். பிரதமர் மோடி தலைமையில் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி ஏற்பட்டால், இரட்டை இன்ஜின் அரசு மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x