Published : 05 Sep 2023 03:31 PM
Last Updated : 05 Sep 2023 03:31 PM
புதுடெல்லி: "இங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல தொற்றுகள் இருந்திருக்கின்றன. இன்றும் பரவலாக இருக்கின்றன. அவை மனிதர்களுக்கிடையே பாகுபாட்டினை உருவாக்கி, மனிதருக்குரிய கண்ணியத்தை மறுக்கிறது" என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். சனதான சர்ச்சை குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதனம் என்பது கொசு, டெங்கு, ஃபுளூ, மலேரியா போன்ற நோய். அதை எதிர்க்கக் கூடாது. ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும்’’ எனப் பேசியிருந்தார். சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்துக்கு வலதுசாரி அமைப்புகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த பிரியங்க் கார்கே, ‘சகமனிதனை மனிதனாக மதிக்காத, சம உரிமை அளிக்காத, எந்த மதமும் நோயைப் போன்றது. உதயநிதிக்கு அவர் நினைக்கும் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது’’ எனக் கூறியிருந்தார்.
பிரியங்க் கார்கேயின் இந்தக் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் பதிலடி கொடுத்திருந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஆக, யாருடைய வயிற்றிலாவது சிக்கல் இருந்தால், நீங்கள் தலையை வெட்டுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
திங்கள்கிழமை நடந்த இந்த வார்த்தைப் போரின் நீட்சியாக பி.எல்.சந்தோஷின் பதிவுக்கு பிரியங்க் கார்கே பதில் அளித்துள்ளார். அது குறித்த எக்ஸ் பதிவில், "சிகிச்சைய அக்கப்பட வேண்டிய தொற்றுகள் இருப்பதாக பி.எல்.சந்தோஷ் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியே. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல தொற்றுகள் இங்கே இருக்கின்றன. அவை மனிதர்களுக்கிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தி, மனிதராக நடத்தப்பட வேண்டிய அவர்களின் மரியாதையை தடுக்கிறது.
உங்கள் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. அதனால் எனக்கு தெளிவூட்டுங்கள். சமூகத்தில் இத்தகைய விதிகளை திணித்தது யார்? ஏது ஒருவரை மற்றவர்களுடமிருந்து தனித்தவராக உருவாக்குகிறது? யார் நம்மை சாதியின் அடிப்படையில் பிரித்தது? ஏன் சிலர் மட்டும் தீண்டத்தகாதவர்களாக இருக்கிறார்கள்? இப்போதும் அவர்களால் ஏன் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை? பெண்களை கீழானவர்களாக காட்டும் முறையை யார் கொடுத்தது? சமத்துவமற்ற ஒடுக்குமுறையிலான இந்த சமூக கட்டமைப்பை யார் கொடுத்தது?
யாரும் இங்கே தலையை வெட்ட நினைக்கவில்லை. அனைவருக்குமான சம வாய்ப்பு மற்றும் மரியாதையுடன் அந்தத் தொற்றினை குணப்படுத்த விரும்புகிறோம். இந்தத் தொற்றுகள் அனைத்தும் குணமாவதற்கு நல்லதொரு தீர்வு, நீங்களும் உங்கள் அமைப்புகளும் எதிர்க்கும் அரசியலமைப்பு சட்டம்தான். நீங்கள் கர்நாடகாவில் இருந்து வந்தவர், தயவுசெய்து குரு பசவண்ணாவின் பிரச்சாரங்களை பரப்புங்கள். சமத்துவமான சமூகத்தை உருவாக்க அது உதவும்" என்று நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பி.எல்.சந்தோஷ், "இடதுசாரிகள், நக்சல்கள், அர்பன் நக்சல்ஸ் போன்ற உங்களின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் சூழ்நிலையை சிதைத்துவிட்டனர். எந்த வழியில் நீங்கள் இணைந்திருக்க விரும்புகிறீர்கள். இந்த நாடும் நாகரிகமும் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஒரு உள்கட்டமைப்பை முறையை தன்னுள் கொண்டுள்ளது. அது காலம் தோறும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT