Published : 05 Sep 2023 09:30 AM
Last Updated : 05 Sep 2023 09:30 AM

6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடங்கியது: இண்டியா கூட்டணிக்கு முதல் சவால்

லக்னோ: உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தராகண்ட், கேரளா, மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செப்.5) காலை 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி, திரிபுரா மாநிலத்தின் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் கோஷி, உத்தராகண்ட் மாநிலத்தில் பாகேஸ்வர், கேரளாவில் புதுப்பள்ளி மற்றும் மேற்குவங்கத்தில் துக்புரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த இடைத்தேர்தல் அண்மையில் உருவான எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் முதல் நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் செப்டம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

துர்காபுரியை தக்கவைக்குமா பாஜக? கடந்த 2021 தேர்தலில் துர்காபுரியை பாஜக கைப்பற்றியது. அத்தொகுதி எம்எல்ஏ பிஷு படா ரே மறைந்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கே பாஜக, திரிணமூல் மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

திரிபுரா நிலவரம் என்ன? திரிபுராவின் தன்பூர், போக்ஸாநகர் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஆளும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இங்கே காங்கிரஸ், திப்ரா மோத்தா கட்சிகள் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

பாஜகவின் கோட்டையா பாகேஸ்வர்? உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதி எம் எல் ஏவாக இருந்த பாஜகவின் சந்தன் ராம் தாஸ் கடந்த ஏப்ரல் மாதம் இறந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கே காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. இருப்பினும் பாகேஸ்வரில் கடந்த முறை பாஜக வேட்பாளர் 12 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் இம்முறையும் அங்கே பாஜகவுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இத்தொகுதியில் பாஜக மறைந்த சந்தன் தாஸின் மனைவி பார்வதி தாஸையே களமிறக்கியுள்ளது.

தும்ரியில் இண்டியா vs என்டிஏ: தும்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் கேபினட் அமைச்சர் ஜகநாத் மஹதோ மறைவால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு என்டிஏ ஏஜேஎஸ்யு கட்சியின் யசோதா தேவியையும், இண்டிய கூட்டணி மறைந்த மஹதோவின் மனைவி பீபி தேவியையும் களமிறக்கியுள்ளது.

ஒமன் சாண்டியின் புதுப்பள்ளி: கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஒமன் சாண்டியின் மறைவால் புதுப்பள்ளிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியை அவர் 53 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்தார். காங்கிரஸ் கோட்டையான இத்தொகுதியில் கடந்த 1967 ஆம் ஆண்டு மட்டும் சிபிஎம் கைப்பற்றியது.

இன்றைய இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஒமன் சாண்டியின் மகன் ஊமன் சாண்டி, பாஜக சார்பில் லிகின்லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜேக் சி தாமஸ் ஆகியோர் களம் கண்டுள்ளனர்.

கட்சித் தாவலால் காலியான கோஷி: உத்தரப்பிரதேசத்தின் கோஷி தொகுதியின் எம் எல் ஏவாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தாரா சிங் சவுஹான் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவில் இணைந்த அவர் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தனிப்பட்ட முறையில் இது சமாஜ்வாடி கட்சிக்கு தன்மானப் பிரச்சினையாக இருக்கிறது. தாரா சிங் சவுஹானுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி சுதாகர் சிங்கை களமிறக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x