Published : 05 Sep 2023 08:16 AM
Last Updated : 05 Sep 2023 08:16 AM
ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கவுள்ளதைத் தொடர்ந்து அவரது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை வரவேற்க டெல்லி பாலம் விமான நிலையம் தயாராகி வருகிறது.
உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 70-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வருகை தரவுள்ளனர். அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஏர் போர்ஸ் ஒன் விமானம் உள்ளிட்ட பல பிரபலங்களின் விமானங்களை வரவேற்க பாலம் தொழில்நுட்ப விமான நிலையத்தின் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்களின் விமானங்கள் டெல்லிக்கு வரவுள்ளதால் அதை வரவேற்கவும், நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாற்று ஏற்பாடுகளாக பாலம் விமானநிலையம் மட்டுமல்லாமல் லக்னோ, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ் ஆகிய 4 விமான நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாலம் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களை வரவேற்கும் பணிகளை பிரதமரின் முதன்மை செயலர் பி.கே. மிஸ்ரா, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜி20 உச்சி மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வரும் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் சமயங்களில் பாலம் விமான நிலையம், மாநாடு நடைபெறும் இடங்கள் அதிக கண்காணிப்பில் வைக்கப்படும். மேலும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை முழு கண்காணிப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
பாலம் விமான நிலையத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அருகில் உள்ள லக்னோ உள்ளிட்ட 4 விமான நிலையங்களுக்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்படும். அமெரிக்க அதிபரின் ஏர் போர்ஸ் ஒன் உள்ளிட்ட விமானங்களை நிறுத்தி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
72 விமானங்கள்… டெல்லி பாலம் விமான நிலையத்தில் 72 விமானங்களை நிறுத்தி வைக்கும் வசதிகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்துக்கு வரும், செல்லும் விமானங்களுக்காகவும் வசதிகள் உள்ளன’’ என்றார்.
மேலும் விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் மையத்துக்குச் செல்வதற்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு களை டெல்லி போலீஸார் செய்துள்ளனர். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிபர் பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT