Published : 05 Sep 2023 06:16 AM
Last Updated : 05 Sep 2023 06:16 AM

மணிப்பூர் குறித்து தவறான அறிக்கை சமர்ப்பித்ததாக பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் மீது வழக்கு - முதல்வர் பிரேன் சிங் தகவல்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குகி சமுதாயத்தினர் இடையே கடந்த 4 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் வன்முறையை ஊக்குவிப்பதாக அமைந்தது என புகார் எழுந்தது.

இந்நிலையில், மணிப்பூரின் உண்மை நிலவரம் குறித்து ஆராய 3 உறுப்பினர்கள் குழுவை இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (இஜிஐ) அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 முதல் 10-ம் தேதி வரை மணிப்பூர் சென்று, நேரில் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், “மணிப்பூரில் கலவரம் மூண்டபோது ஆளும் மாநில அரசு ஒரு பிரிவினருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதை தவிர்த்திருக்க வேண்டும். ஜனநாயகக் கடமையை செய்ய அரசு தவறிவிட்டது. மைத்தேயி சமூகத்தினருக்கு ஆதரவாக அரசு செயல்பட்டுள்ளது. மேலும் குகி இனத்தவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மாநில அரசு கூறுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இம்பாலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என்.சரத் சிங் இம்பால் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், “இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தவறான, ஜோடிக்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் பற்றி எரியும் ஒரு படம் இடம்பெற்றுள்ளது. அதற்கான படவிளக்கத்தில், சுராசாந்த்
பூரில் குகி இனத்தைச் சேர்ந்த ஒருவரின் வீடு பற்றி எரிவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த கட்டிடம் வனத் துறைக்கு சொந்தமான அலுவலகம் ஆகும். வன்முறை கும்பல் மே 3-ம் தேதி தீ வைத்ததில் அந்த கட்டிடம் பற்றி எரிகிறது” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “மணிப்பூரில் ஆய்வு செய்த இஜிஐ உறுப்பினர்கள் வன்முறைக்கு காரணமான இருதரப்பு சமுதாய பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசாமல் ஓர் அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்துள்ளனர். இதன்மூலம் மணிப்பூரில் வன்முறையை மேலும் தூண்ட இஜிஐ உறுப்பினர்கள் முயற்சி செய்துள்ளனர். அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றார்.

இதனிடையே, இஜிஐ சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற புகைப்பட விளக்கம் தவறாக இடம்பெற்றுள்ளது. இதற்காக வருந்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x