Published : 04 Sep 2023 07:11 AM
Last Updated : 04 Sep 2023 07:11 AM

இந்து மதத்துக்கு மாறிய அசாம் முஸ்லிம் பெண் மருத்துவருக்கு குடும்பத்தினர் கொலை மிரட்டல்

திப்ருகர்: அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலிமா அக்தர் மருத்துவராக உள்ளார்.

முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர் தற்போது இந்து மதத்துக்கு மாறியுள்ளார். இதனால், தனது குடும்பத்தினரிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அலிமா அக்தர் தன்னுடைய வீடியோவில் பேசியிருப்பதாவது: என்னுடைய பெயர் அலிமா அக்தர். என்னுடைய வாக்குமூலமாக இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். நான் இப்போது விமான நிலையத்தில் இருக்கிறேன். இங்கு பாதுகாவலர்கள் இருக்கின்றனர். இதனால், எனக்கு எந்த ஆபத்தும் நிகழாது. ஆனால், என்னுடைய பிரச்சினை குடும்பத்தில் இருந்து வருகிறது. என் குடும்பத்தினர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். நான் இந்து மதத்தை தழுவி விட்டேன்.

இதனால், என் குடும்பத்தினர் என்னை கொல்ல நினைக்கின்றனர். என் குடும்பத்தினர் என்னைவிட அதிக வயதுடைய மதகுரு ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். மதகுருவான அவரை நான் திருமணம் செய்தால், என் மரணத்துக்குப் பிறகு எனக்கு நேரடியாக சொர்க்கம் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இதனால், நான் என் குடும்பத்தினரிடமிருந்து விலகி இருக்கிறேன்.

ஆனால், என்னை யாரோ கடத்திவிட்டதாக அவர்கள் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான் கடத்தப்பட்டுவிட்டதாக அவர்கள் சொல்வது பொய். யாரும் என்னை கடத்தவில்லை. நான் நன்றாக இருக்கிறேன். என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நான் அவர்களிடமிருந்து தப்பித்து தனியாக வந்துள்ளேன்.”

இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x