Published : 04 Sep 2023 07:35 AM
Last Updated : 04 Sep 2023 07:35 AM
புதுடெல்லி: நாடு 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தொடங்கியது.அவசர நிலைக்கு பிறகு 1977 மார்ச்சில் வந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி உருவானது. இக்கட்சி காங்கிரஸ் அல்லாத முதல் கூட்டணி ஆட்சியை மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைத்தது. எனினும் பிரதமர் மொரார்ஜி தேசாய் 2 வருடம் 126 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது. மொரார்ஜியின் ஜனதா ஆட்சி, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஜனசங்கத்தால் (பாஜக) கவிழ்ந்தது.
பிறகு ஜனதாவின் ஓர் அங்கமான மதசார்பற்ற ஜனதா கட்சியின் தலைவர் சவுத்ரி சரண்சிங் பிரதமர் ஆனார். இவரது அரசு காபந்து அரசு போல் 170 நாட்கள் நீடித்தது. 1980 ஜனவரியில் மக்களவை தேர்தல் வந்தது. இதில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்று இந்திரா காந்தி பிரதமர் ஆனார். 1984-ல் தனது ஆட்சி முடியும் தருவாயில் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார். புதிய பிரதமராக அவரது மகன் ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். 1984 தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமராகி முழுமையான ஆட்சி அளித்தார்.
அடுத்து 1989-ல் தேர்தல் வந்தது. ராஜீவ் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த விஸ்வநாத் பிரதாப் சிங், ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இவருடன், திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் சேர்ந்து தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணி அமைத்தன.
1989 தேர்தலில் இக்கூட்டணிக்கு கிடைத்த வெற்றியால் ஜனதா தளம் தலைவரான வி.பி.சிங் பிரதமர் ஆனார். இவருடன் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்க, இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தன. எனினும் மண்டல் கமிஷன் அமல், அத்வானியின் ரத யாத்திரைக்கான தடை ஆகியவற்றால் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதன் காரணமாக, பிரதமர் வி.பி.சிங் 343 நாட்களில் பதவி இழந்தார்.
அப்போது, முக்கிய கட்சிகளில் காங்கிரஸ் 197, ஜனதா தளம் 143, பாஜக 85 மற்றும் இடதுசாரி கட்சிகள் 45 என எம்.பி.க்களை பெற்றிருந்தன. இதன் பிறகு வெளியில் இருந்து காங்கிரஸ் அளித்த ஆதரவுடன் சமாஜ்வாதி ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் பிரதமர் ஆனார். எனினும் அவரது ஆட்சி 223 நாட்களில் கவிழ்ந்தது. இதனால், 1991-ல் மக்களவை தேர்தலை நாடு சந்தித்தது.
1991 தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமரான பி.வி.நரசிம்மராவ், தனது முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்தார்.
அடுத்து 1996 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானதால் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால், மிகக்குறுகியக் காலமாக 13 நாட்களில் பதவி இழந்தார். இச்சூழலில் முதன்முறையாக ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. இதன் முதல் பிரதமராகும் வாய்ப்பு, ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடாவுக்கு கிட்டியது. இவர் 324 நாட்களில் பதவி இறக்கப்பட்டு, அதே கட்சி சார்பில் ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆனார். இவரது ஆட்சி 332 நாட்களுக்கு பிறகு காங்கிரஸால் கவிழ்ந்தது.
மீண்டும் 1998 மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையில் 13 கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) என்ற புதிய கூட்டணியை பாஜக தலைவர் வாஜ்பாய் அமைத்தார்.
1998 தேர்தலில் என்டிஏவின் முதல் வெற்றியை தொடர்ந்து வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். 13 மாதங்கள் மட்டுமே நீடித்த இவரது ஆட்சிக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் வாக்கெடுப்பில் வெறும் ஒரு வாக்கில் என்டிஏ அரசு கவிழ்ந்தது. இதற்கு அக்கூட்டணியில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காரணமானார். இதனால் 1999 மே மாதம் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் என்டிஏ மீண்டும் வெற்றிபெற்று பிரதமரான வாஜ்பாய் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார். இதன் பிறகு கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கும் ஏற்பட்டது.
முதல்முறையாக தனது தலைமையில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை (யுபிஏ) அமைத்தது காங்கிரஸ். இதில், 2004 மற்றும் 2009 தேர்தலில் யுபிஏ அடுத்தடுத்து வெற்றிபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் யுபிஏ அரசு ஆட்சியில் இருந்தது.
2014 தேர்தலில் முதல்முறையாக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி புயல் வீசியது. இதன் தாக்கமாக என்டிஏ வெற்றி பெற்று பிரதமர் ஆனார் மோடி. மீண்டும் 2019 தேர்தலில் வலுவாகவீசிய புயலால் மீண்டும் பிரதமரானார் மோடி. அடுத்து 2024 தேர்தலிலும் வென்று என்டிஏ சார்பில் மூன்றாவது முறையாக பிரதமராக முயல்கிறார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT