Published : 03 Sep 2023 06:34 AM
Last Updated : 03 Sep 2023 06:34 AM

கியான்வாபி மசூதி வழக்கு | ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மேலும் 8 வாரங்கள் அவகாசம் தேவை - தொல்லியல் ஆய்வுத் துறை கோரிக்கை

புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாத் ஆலயத்துக்கு அருகேயுள்ள 17-ம் நூற்றாண்டு கியான்வாபி மசூதி, கோயில் மீது கட்டப்பட் டுள்ளதா என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டஜமியா மசூதி கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கியான்வாபி மசூதி வளாகத்தை தொல்பொருள் ஆய்வுத் துறை அறிவியல் பூர்வ மாக ஆய்வு செய்ய அனுமதி வழங்கியது. இதன் அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கியான்வாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்வதை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றமும் மறுத்துவிட்டது.

இதையடுத்து இதற்கான ஆய்வுகள் ஒசுகானாவை தவிர்த்து மற்ற இடங்களில் கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கின. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. ஆய்வுப் பணிகள் முழுவதுமாக முடியாததால், மேலும் 8 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வாரணாசி கூடுதல் மாவட்ட நீதிபதி செப்டம்பர் 8-ம் தேதி விசாரிக்கிறார்.

இது குறித்து இந்துக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதிர் திரிபாதி கூறுகையில், ‘‘தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்யலாம். ஆய்வு முடிவடையாமல் இருப்பதால், அவர்கள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x