Published : 02 Sep 2023 10:49 PM
Last Updated : 02 Sep 2023 10:49 PM

நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவு - இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ரோவர் அதன் பணிகளை முடித்தது. இது இப்போது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகளில் இருந்து தரவு லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பப்படுகிறது. ரோவரின் பேட்டரிகள் தற்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. ரோவரின் ரிசீவரும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது.

சில மணி நேரங்களுக்கு பிறகு,லேண்டரில் இருந்த ‘பிரக்யான்’ ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. லேண்டர், தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களையும் அனுப்பி வருகின்றன.

நேற்று லேண்டர் கலனை, ரோவர் வாகனம் எடுத்துள்ள படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது. அதில், ‘‘ரோவர் வாகனம் தன்னிடம் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் லேண்டரை படம் பிடித்து புவிக்கு அனுப்பியுள்ளது. இந்த கேமரா பெங்களூரில் அமைந்துள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டதாகும்’’ என்று கூறப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தில் லேண்டர், ரோவர் ஆகிய கலன்கள் பத்திரமாக நிலவின் மேற்பரப்பை அடைந்த பின்னர் ஒன்றை ஒன்று படம் பிடித்து அனுப்புவதும் முக்கிய அம்சமாக இருந்தது.

அந்தவகையில் ரோவர் தரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பின்பு அதை பல்வேறு படங்கள் எடுத்து லேண்டர் அனுப்பியிருந்தது. ஆனால், லேண்டரின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரோவர் எப்போது லேண்டரை படம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு விஞ்ஞானிகள் மத்தியில் நிலவியது.

தற்போது ரோவர் மூலம் எடுக்கப்பட்ட லேண்டரின் படங்களானது அந்த ஏக்கத்தை தணித்துள்ளது. மேலும், இந்த படங்கள் காலங்கடந்தும் வரலாற்றில் முக்கிய அங்கமாக இருக்கும் என்று அறிவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம் லேண்டர், ரோவர் கலன்களின் ஆய்வுக் காலம் செப்டம்பர் 3-ம் தேதியுடன் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x