Published : 02 Sep 2023 07:13 PM
Last Updated : 02 Sep 2023 07:13 PM

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழு உறுப்பினர்களாக அமித் ஷா, ஆதிர் சவுத்ரி உள்ளிட்டோர் அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தற்போதுள்ள கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை இக்குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் இவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவற்றில் தேவைப்படும் திருத்தங்களை ஆய்வு செய்து அது குறித்து இக்குழு பரிந்துரைக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே இதன் நோக்கம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவும் எதிர்ப்பும்: முன்னதாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக, தமாகா ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் சில ஆண்டு கால இடைவெளியில் தேர்தல் நடைபெறுகிறது. மாறி மாறி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மக்களவைக்கும்,மாநில சட்டப்பேரவைகளுக்கும் 1967 வரை 4 தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. ஆனால் 1968-69-ல் சில மாநிலங்களில் அரசுகள் கலைக்கப்பட்டதால் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. மேலும், மக்களவையும் 1970-ல் அதன் பதவிக் காலத்துக்கு ஓராண்டுக்கு முன்னதாக கலைக்கப்பட்டது. 1971-ல் இடைக்கால தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த சூழலில், ‘மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரேநேரத்தில் நடத்துவதற்கான வழிமுறை உருவாக்கப்படும்’ என்று கடந்த 2014-ல் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தல் அறிக்கையின் 14-ம்பக்கத்தில், “தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுப்பதற்காக தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் பாஜக உறுதியாக உள்ளது. பிற கட்சிகளுடன் கலந்து பேசி, ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும்மக்களவை தேர்தலை நடத்தும் முறையை உருவாக்க பாஜக முயற்சிக்கும். அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவினங்களை இது குறைப்பதுடன் மாநில அரசுகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். நடைமுறை எதார்த்த அடிப்படையில் தேர்தல் செலவின வரம்புகளை திருத்துவது குறித்தும் ஆராய்வோம்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையின் சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு நேற்று குழு அமைத்துள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத் தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடக்க உள்ளது. இதில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்படுகிறது, கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதனால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறும்போது, “இதற்கு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மட்டுமல்ல, மாநிலங்களின் ஒப்புதலும் தேவை. ஒரு மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலத்தை குறைக்க முடியாது” என்றார். அரசியல் கட்சிகளுடனோ, நாடாளுமன்றத்திலோ ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்தார். முன்னாள் குடியரசுத் தலைவரை ஒரு குழுவுக்கு தலைவராக நியமித்து, மரபுகளை மத்திய அரசு மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

‘ஒரே நாடு, ஒரேதேர்தல்’ திட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள வலைதள பதிவில், ‘மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. அது நம் நாட்டின் வளர்ச்சி வேகம், அரசியல் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் நேரமும், பெரும் செலவும் மிச்சமாகும். இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய சிறப்பு அலசல் > ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் பலன்கள் என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x