Published : 02 Sep 2023 12:02 PM
Last Updated : 02 Sep 2023 12:02 PM
ஸ்ரீஹரிகோட்டா: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஏவப்பட்டத்தில் இருந்து மூன்று படிநிலைகளை வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அது சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவது இன்னும் ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்படும். இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலன் 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடையும்.
பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ‘ஆதித்யா’ மேற்கொள்ளும்.
முன்னதாக, விண்கலத்தை ஏவுவதற்கான 23.40 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 12.10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் குறிக்கப்பட்ட நேரத்தில் வெற்றிகரமாக விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
முதல் விண்கலம்: சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா- எல்1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. இதில் சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன.
ஆதித்யா-எல்1 அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் விஞ்ஞானிகள் குழு வடிவமைத்தது. இதில், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT