Published : 02 Sep 2023 06:43 AM
Last Updated : 02 Sep 2023 06:43 AM
புதுடெல்லி: கடந்த 2014-ல் பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். இது சாத்தியம் அல்ல என்று அக்கருத்து புறந்தள்ளப்பட்டு வந்தது. எனினும் இதை சாத்தியமாக்க பிரதமர் மோடியின் அரசு தற்போது தயாராகி வருகிறது. இந்த விவகாரம், நாடாளுமன்றத்தின் வரும் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவது உறுதியாகி விட்டது. எனினும் இதை ஒரே சமயத்தில் அமலாக்குவது சாத்தியமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஏனெனில், ஒரே சமயத்தில் அமலாக்க வேண்டுமானால், நாடு முழுவதிலும் ஐந்து வருட ஆட்சிக்காலத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட வேண்டும். இதில், அவை அமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் முடிந்துள்ளன என்பதை கணக்கில் கொள்ள முடியாது. இதுபோல் செய்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. மாறாக, இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் கொந்தளிப்பை உருவாக்கி விடும் ஆபத்து உள்ளது.
எனவே இந்த தேர்தல் முறையைபடிப்படியாகவே அமலாக்க சாத்தியம் உண்டு. உதாரணமாக, அடுத்த ஓரிரு மாதங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகியமாநிலங்களில் சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல்நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஹரியாணா, மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. புதிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் தேர்தலும் பாக்கி உள்ளது.
எனவே 12 மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. இத்துடன், கடைசி ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் ஆட்சிக் காலம் பாக்கி உள்ள மாநிலங்களையும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தும் சாத்தியங்களும் உள்ளன. இந்தப் பட்டியலில், ஜார்க்கண்ட்,டெல்லி மற்றும் பிஹார் இடம்பெற்றுள்ளன. இந்த 15 மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்பினரின் ஆட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வரும் 2024 தேர்தலுக்கு பிறகு அடுத்த மக்களவைத் தேர்தலுடன் மேலும் சில மாநிலங்கள் அல்லதுஎஞ்சிய அனைத்து மாநிலங்களையும் சேர்க்க முடியும். இது முடியாவிட்டால், எஞ்சிய மாநிலங்களில் மூன்றாவது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தலாம். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் முழுமையாக அமலாக்கம் பெறும் என கணிக்கப்படுகிறது.
இந்த தேர்தல் முறையால் இந்தியாவுக்கு கிடைக்கும் பல்வேறு பலன்களும் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் மட்டும் சுமார் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதில், மத்திய அரசின் செலவுடன் அரசியல் கட்சிகளின் செலவும் அடங்கும். இதில் சட்டப்பேரவை தேர்தல்களையும் சேர்த்தால் தேர்தல் செலவு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும். இந்த செலவுத் தொகையில் பெரும்பகுதி இந்தியாவுக்கு மிச்சமாகும்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களால் கல்வி பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தவிர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்திற்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களும் குறையும். அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தலாம். இதன் பலன் பொதுமக்களுக்கு வந்து சேரும். தேர்தல் எனும் பெயரில் பொதுமக்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் பல சேவைகள் தொடரும்.
மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில காவல் துறைகளின் உழைப்பு விரயமாவது தவிர்க்கப்படும். மாநில மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சினைகளை விட தேசிய அளவிலான பிரச்சினைகள் புதிய தேர்தல் முறையில் ஓங்கி நிற்கும். பொதுமக்களுக்கும் தேசிய உணர்வு அதிகரிக்கும்.
இழப்புகள்: ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் சட்டப்பேரவையை விட மக்களவைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்தமுறையால், மாநில மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தமுறை தேர்தலை இதுவரை இல்லாத அளவில் பல கட்டங்களாக நடத்திவேண்டி வரும். ஏனெனில் மத்திய பாதுகாப்பு படைகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் மாற்றி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. நாட்டில் கடந்த காலங்களில் இதுபோல் ஒரே நேரத்தில்இரு தேர்தல்களும் நடந்துள்ளன. ஆனால் அப்போது மக்கள் தொகையும் பாதுகாப்பு பிரச்சினைகளும் குறைவாக இருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...