Published : 01 Sep 2023 04:05 PM
Last Updated : 01 Sep 2023 04:05 PM

ஒரே நாடு ஒரே தேர்தல் | சாத்தியப்படுத்துவதில் சவால்கள் என்னென்ன? - பி.கே.மல்ஹோத்ரா கருத்து

புதுடெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், அரசியல் ரீதியாக கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதோடு, அரசியல் சாசன திருத்தமும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என சட்டத்துறை முன்னாள் செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது: "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தற்போது முதல்முறையாக கூறப்படுவது அல்ல. இதற்கு முன்பும் இது குறித்த விவாதம் நடந்திருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அவ்வப்போது இது குறித்து பேசி வந்திருக்கிறார்கள். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து மறு ஆய்வு மேற்கொள்வதற்கான நேரம் தற்போது வந்திருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 1950-ல் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் 4 தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் ஒன்றாகத்தான் நடந்தன. அப்போது எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு கட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டதாலும், இதேபோல் சட்டமன்றத் தேர்தல்கள் முன்கூட்டியே நடத்தப்பட்டதாலும் தேர்தல்கள் பல்வேறு காலங்களில் நடக்கும் வகையில் மாறிப்போனது.

இந்த ஆண்டு நவம்பர், டிசம்பருக்குள் 5 மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளன. அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். இந்த இரண்டும் ஒன்றாக நடத்தப்படுமானால், தேர்தல் செலவு மிகப் பெரிய அளவில் மிச்சமாகும். அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் வளர்ச்சிப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முடியும். தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அளிக்கும்.

தற்போதுள்ள சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, இதை அனைவரும் விரும்ப வேண்டும். இரண்டாவது, அரசியல் சாசனப்படி இதற்கு சாத்தியக்கூறு உள்ளதா என்பது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டால், வாக்காளர்கள் வாக்களிக்க ஒரே முறை சென்றால் போதும். அதோடு, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அனைவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கவனம் செலுத்த முடியும்.

அரசியல் சாசனத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் சட்டமன்றங்களின் பதவிக்காலமும் 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விஷயத்தில் அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியமாகிறது. அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமானால், 3-ல் 2 பங்கு எம்,பி.க்களின் ஆதரவு அதற்கு இருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத எம்பிக்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும். அதோடு, குறைந்தது 50 சதவீத சட்டமன்றங்களின் ஆதரவு இதற்கு கட்டாயம் தேவை. .

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஏனெனில், சட்டமன்றத் தேர்தலில் உள்ளூர் விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும். இதைக் கருத்தில் கொண்டு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. முதல் 4 தேர்தல்கள் ஒன்றாகத்தான் நடந்துள்ளன. அப்போது இதுபோன்ற பிரச்சினைகள் எழவில்லை.

சட்டத்துறை முன்னாள் செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு ஏற்ப தேர்தல் நடத்துவதில் சிரமம் இருக்காது. ஏனெனில், நாம் தற்போது மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு மாறிவிட்டோம். நம்மிடம் போதுமான மனித வளம், தொழில்நுட்ப வளம் உள்ளது. வாக்காளர்களும் தற்போது எதற்காக வாக்களிக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். எனவே, இத்தகையப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்துவிட்டால் மிகப் பெரிய அளவில் மனித சக்தி சேமிக்கப்படும், வாக்காளர்களுக்கு இது மிகவும் உதவும், தற்போதைய அமிர்த காலத்தில் இது மிக முக்கிய தேர்தல் சீர்திருத்தமாக இருக்கும்" என்று சட்டத்துறை முன்னாள் செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. | வாசிக்க > ஒரே நாடு ஒரே தேர்தல் | முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய செயல்: காங்கிரஸ்

அதேவேளையில், இம்முடிவை பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் வரவேற்றுள்ளனர். | வாசிக்க > ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு - அசாம், உ.பி. உத்தராகண்ட், மகாராஷ்டிர முதல்வர்கள் வரவேற்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x