Published : 01 Sep 2023 06:41 AM
Last Updated : 01 Sep 2023 06:41 AM
புதுடெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அமிதவ ராய் தலைமையிலான சிறை சீர்திருத்தங்களுக்கான உச்சநீதிமன்ற குழு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநங்கைகள் மற்ற வகை கைதிகளுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும். சம உரிமைகள் மற்றும் வசதிகள் திருநங்கை கைதிகளுக்கும் ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவும், சரியான முறையில் தொடர்பு கொள்ளவும் சிறை ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
தற்போது அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அதிகார துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மேலும், திருநங்கைகளுக்கு தேவையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை சிறை நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மற்ற கைதிகளிடமிருந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.
சட்டப்படி நடவடிக்கை: திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிறைகளில் உள்ள திருநங்கைகளின் உரிமை மீறல் புகார்களைக் கையாள 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் சிறை அதிகாரிகள் புகார் அதிகாரியை நியமித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திருநங்கைகளுக்கான நலத்திட்டங்களை உருவாக்கவில்லை.
திருநங்கைகளுக்கு பிரத்யேகமாக தனி குளியலறை மற்றும் கழிப்பறை பகுதிகளுடன் போதுமான சுகாதார வசதிகளை சிறைத்துறைகள் உறுதி செய்ய வேண்டும். சுகாதார பரிசோதனை ஒவ்வொரு திருநங்கை கைதிக்கும் சேர்க்கையின் போது சமூக-உளவியல் மதிப்பீட்டைத் தொடர்ந்து ஒரு விரிவான சுகாதார பரிசோதனை நடத்தப்பட வேண்டும். தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்க விரும்பும் திருநங்கைகள் சிறை ஊழியர்களால் எந்தவித கட்டுப்பாடும், அச்சமும் இன்றி ஊக்குவிக்கப்படுவதை சிறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT