Published : 01 Sep 2023 06:24 AM
Last Updated : 01 Sep 2023 06:24 AM

ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து? - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என்பதற்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற இயலுமா? ஜம்மு காஷ்மீர் மீண்டும் எப்போது மாநிலமாக மாற்றப்படும் என்பது தொடர்பாக விரிவான பதிலை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவை மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என்று காலக்கெடு விதிக்க முடியாது. ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கை மட்டுமே. மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது.
அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விரைவில் முடிந்துவிடும். இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

2019-க்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் 3 அடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே முதலில் அங்கு பஞ்சாயத்துக்குத் தேர்தல் நடைபெறும். இந்நிலையில் சில இடங்களில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதைப் போலவே லே பகுதியிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கார்கில் மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெறும்.

2-வது தேர்தலாக நகரசபைகளுக்கு தேர்தல் நடைபெறும். 3-வதாக அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் சமயங்களில் கடையடைப்பு, கல்வீச்சு, முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் பணிகள் பாதிக்கப்படும். 2018-ல் கல்வீச்சு சம்பவங்கள் 1,767-ஆக இருந்தன. 2017-ல் அறிவிக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டங்கள் 52-ஆக இருந்தன.

தற்போது 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு கல்வீச்சு சம்பவங்கள், கடையடைப்பு, முழு அடைப்புப் போராட்டங்கள் என எதுவும் நடத்தப்படுவது இல்லை. இந்நிலையில் பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு விஷயங்களை மத்திய அரசு அங்கு செய்து வருகிறது. எனவே, ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம். இதுதொடர்பான முடிவை தலைமைத் தேர்தல் ஆணையம், ஜம்மு காஷ்மீரிலுள்ள மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து எடுக்கும். இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x