Published : 01 Sep 2023 05:41 AM
Last Updated : 01 Sep 2023 05:41 AM
மும்பை: இண்டியா கூட்டணியின் 2 நாள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கும் நிலையில், இன்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூருவில் கடந்த ஜூன், ஜூலையில் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று மாலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தின் முதல் நாளான நேற்று இரவு, கூட்டணி தலைவர்களுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விருந்து அளித்தார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்
விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டணியை வழிநடத்த 11 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை நியமிக்க தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், திரிணமூல், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் இக்குழுவில் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் 326 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அடுத்து 2-வது இடத்தில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் இருந்தனர். இதை கருத்தில் கொண்டு, வரும் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
கூட்டணிக்குள் மோதல்: இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணியும், காங்கிரஸும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக செயல்படுகின்றன. காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - தேசிய மாநாட்டு கட்சி இடையே மோதல் நிலவுகிறது. டெல்லி, பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மியுடனும், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியுடனும் காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடிக்கிறது. எனவே, மக்களவை தேர்தலின்போது கூட்டணி கட்சிகள் எந்த அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
பிரதமர் வேட்பாளர் யார்?: பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் ராகுல் காந்தி, நிதிஷ் குமார், கேஜ்ரிவால், சரத் பவார், உத்தவ் தாக்கரே என பலர் உள்ளனர். இதுபற்றி ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வியாதவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, புதிய எம்.பி.க்கள் ஆலோசித்து பிரதமரை தேர்வு செய்வார்கள்’’ என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வலுவான பிரதமர் வேட்பாளராக மோடி உள்ளார். எனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் இண்டியா கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT