Published : 31 Aug 2023 10:48 PM
Last Updated : 31 Aug 2023 10:48 PM
பெங்களூரு: நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், "சந்திரயான் 3 லேண்டரில் உள்ள சந்திர நில அதிர்வு செயல்பாட்டிற்கான கருவி (ILSA) நிலவில் ஆகஸ்ட் 26, 2023 அன்று இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்துள்ளது. மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (MEMS) தொழில்நுட்ப அடிப்படையிலான அந்த கருவி, பிரக்யான் ரோவர் மற்றும் பிற பேலோடுகளின் இயக்கங்கள் காரணமாக ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்துள்ளது. நிலவில் ஏற்பட்ட இந்த அதிர்வு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
In-situ scientific experiments continue .....
Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL— ISRO (@isro) August 29, 2023
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது.
சில மணி நேரங்களுக்கு பிறகு,லேண்டரில் இருந்த ‘பிரக்யான்’ ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. லேண்டர், தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களையும் அனுப்பி வருகின்றன.
நேற்று லேண்டர் கலனை, ரோவர் வாகனம் எடுத்துள்ள படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது. அதில், ‘‘ரோவர் வாகனம் தன்னிடம் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் லேண்டரை படம் பிடித்து புவிக்கு அனுப்பியுள்ளது. இந்த கேமரா பெங்களூரில் அமைந்துள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டதாகும்’’ என்று கூறப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தில் லேண்டர், ரோவர் ஆகிய கலன்கள் பத்திரமாக நிலவின் மேற்பரப்பை அடைந்த பின்னர் ஒன்றை ஒன்று படம் பிடித்து அனுப்புவதும் முக்கிய அம்சமாக இருந்தது.
அந்தவகையில் ரோவர் தரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பின்பு அதை பல்வேறு படங்கள் எடுத்து லேண்டர் அனுப்பியிருந்தது. ஆனால், லேண்டரின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரோவர் எப்போது லேண்டரை படம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு விஞ்ஞானிகள் மத்தியில் நிலவியது.
தற்போது ரோவர் மூலம் எடுக்கப்பட்ட லேண்டரின் படங்களானது அந்த ஏக்கத்தை தணித்துள்ளது. மேலும், இந்த படங்கள் காலங்கடந்தும் வரலாற்றில் முக்கிய அங்கமாக இருக்கும் என்று அறிவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம் லேண்டர், ரோவர் கலன்களின் ஆய்வுக் காலம் செப்டம்பர் 3-ம் தேதியுடன் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT