Published : 31 Aug 2023 07:36 AM
Last Updated : 31 Aug 2023 07:36 AM
பெங்களூரு: கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தொடங்கி வைத்தார்.
கர்நாடக தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம்ரூ.2,000, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவசஅரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் இலவசம், பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணம் ஆகிய 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.
இதன்படி, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவச அரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதைக் குறிக்கும் வகையில் மைசூரு நகரில் நேற்று விழா நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மல்லிகார்ஜுன கார்கே குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கி, குடும்ப லட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரும் ரூ.2,000 வழங்கினர்.
இந்த விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘நாங்கள் அறிவித்த 5 உத்தரவாத திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என பாஜகவினர் பொய்யாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த நூறே நாட்களில் 5 திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டோம்.
இலவச அரிசி திட்டத்துக்கு அரிசி வழங்காமல் மத்திய அரசு வெளிப்படையாகவே எதிர்ப்பை காட்டியது. அதனை மீறி அந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம். குடும்ப தலைவிகளுக்கான இந்த திட்டத்தினால் அவர்களுக்கு பொருளாதார விடுதலை கிடைத்திருக்கிறது. இதனால் 1.1 கோடி குடும்ப தலைவிகள் மாதம் ரூ. 2,000 உதவித் தொகை பெற இருக்கின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...