Published : 03 Dec 2017 09:03 AM
Last Updated : 03 Dec 2017 09:03 AM
அகமதாபாத் நகரின் நெரிசல் மிகுந்த எல்லீஸ் மேம்பாலத்திலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான ராஜீவ் காந்தி பவன். முகப்பில் ராஜீவின் சிலையில் மட்டுமே உறைந்திருக்கிறது உற்சாகமான சிரிப்பு. இதற்கு நேர்மாறாக உற்சாகமின்றி இருக்கிறது அந்த அலுவலகம். தேர்தலுக்கு பத்து நாட்கள்கூட இல்லாத நிலையில், கூட்டமே இல்லாமல் காட்சியளிக்கிறது அலுவலகம். ஊழியர்கள் சாவகாசமாக மதியம் 12 மணிக்கு மேல் வந்து, 6 அல்லது 7 மணிக்கு பூட்டிக் கொண்டுப் போய்விடுகிறார்கள். கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இருக்கும் தூசு படிந்த பத்திரிகையாளர்கள் கூட்ட அரங்கத்தை மதிய உணவு உண்பதற்கான இடமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் காங்கிரஸ் ‘பீட்’ பார்க்கும் சில பத்திரிகையாளர்கள். இதற்கும் மேல் இருக்கும் இரு தளங்கள் ஆள் அரவமே இல்லாமல் திகில் கிளப்புகின்றன.
அறிக்கையில் மட்டுமே அரசியல்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாடுகள் அறிக்கை அளவிலேயே இருக்கின்றன. பண மதிப்பு நீக்கம் நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) ஆகியவற்றின்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய அளவுக்குக்கூட குஜராத்தில் போராட்டங்களை மேற்கொள்ளவில்லை. தேர்தலின்போது மட்டுமே உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களை வீதியில் பார்க்க முடியும் என்கிறார்கள் அங்கிருக்கும் அரசியல் பார்வையாளர்கள்.
பரிச்சயமில்லாத அகமது படேல்
குஜராத்தில் காங்கிரஸின் முகமாக கருதப்படும் அகமது படேல் குஜராத்தின் காங்கிரஸ்காரர் என்பதை உள்ளூர் காங்கிரஸாரே ஏற்க மறுக்கிறார்கள். “அகமது படேலுக்கும் குஜராத்தின் நடப்பு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் அடைந்த தோல்விக்குப் பிறகு, குஜராத் அரசியலிலிருந்து விலகி டெல்லி அரசியலுக்கு சென்றுவிட்டார். மாநிலத்தின் பிரச்சினைகளுக்காக ஒருபோதும் அவர் தலைமையிடம் கேள்வி எழுப்ப மாட்டார். காங்கிரஸ் வீழ்ச்சியில் அகமது படேலுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது...” என்கிறார் சமீபத்தில் பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-வான போலாபாய் கோகல்.
“பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக-வின் செல்லப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே தொழில் தொடர்புகள் இருக்கின்றன. ஆளுங்கட்சியினருடன் அனுசரித்துப் போவதன் மூலம் கிடைத்தவரை லாபம் என்கிற நோக்கத்தில் செயல்படுகிறார்கள் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்...” என்கிறார்கள் உள்ளூர் காங்கிரஸ் நபர்கள்.
மாநில முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், “2002-ம் ஆண்டு கலவரங்களின்போது மோடியின் அரசாங்கம் காவல் துறையின் கைகளை எப்படி கட்டிப்போட்டது என்பதை சட்டசபையில் பேச வலியுறுத்தி அறிக்கையாகவே தயாரித்து காங்கிரஸ் கட்சியிடம் அளித்தேன். ஆனால், சட்டசபையில் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ கூட வாயைத் திறக்கவில்லை...” என்கிறார்.
தேடி வந்திருக்கும் வாய்ப்புகள்!
ஆனாலும்கூட, 22 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காத வாய்ப்பு தற்போது தேடி வந்துள்ளது. 25 ஆண்டுகளாக பாஜக-வுக்கு ஆதரவாக இருந்த படேல் சமூகத்தின் உட்பிரிவான ‘கட்வா’ சமூகத்தின் பெரும்பான்மையான வாக்குகள் ஹர்திக் படேல் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். ‘ஏக்தா மஞ்ச்’ தலைவரான அல்பேஷ் தாக்கூர் இரு மாதங்களுக்கு முன்பே காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார். இவர் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவரின் சுமார் ஏழு சதவீதம் வாக்குகளில் பாதியாவது காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக தெரிவிக்காத ஜிக்னேஷ் மேவானி, வடகம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஜிக்னேஷுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக காங்கிரஸ் அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை. இது ஜிக்னேஷை ஆதரிக்கும் பட்டியல் இன மக்கள் மற்றும் முஸ்லிம்களை காங்கிரஸ் பக்கம் திருப்பியிருக்கிறது.
பாஜக-வின் ஓட்டு வங்கிகளாக இருந்து வந்த தாக்கூர், சத்திரியா, கோலி ஆகிய சமூகத்தினர் பல்வேறு அதிருப்திகளால் மீண்டும் காங்கிரஸ் பக்கம் நகர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. சமூகரீதியான ஓட்டுக்களால் முன்பு பாஜக பலமாக இருந்த செளராஷ்டிரா, வடக்கு குஜராத் ஆகிய பகுதிகளும் காங்கிரஸுக்கு சாதகமாக மாறியிருப்பதாக சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜிவ் ஷா.
மக்களின் பொதுவான பிரச்சினைகளுடன் பிரதான சமூகங்களின் ஆதரவும் இப்போது முதன்முறையாக காங்கிரஸை தேடி வந்துள்ளது. அரசியல் சூழல் தற்போது வெற்றி என்னும் தங்கத் தேரை காங்கிரஸ் கட்சி முன்பாக நிறுத்தியிருக்கிறது. ஆனால், குஜராத் காங்கிரஸில் அந்தத் தேரை இழுக்கத்தான் யாரும் இல்லை என்பதே நிதர்சனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT