Published : 30 Aug 2023 07:21 AM
Last Updated : 30 Aug 2023 07:21 AM
விஜயவாடா: திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழுவில் உள்ள குற்றப் பின்னணி கொண்டவர்களை நீக்கக் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்ட பின்னர், சமீபத்தில் 24 பேர் கொண்ட அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு நியமனம் செய்வதாக உத்தரவு பிறப்பித்தது.
ஆன்மீகத்தில் நாட்டம், பக்தர்களின் நலன், பாதுகாப்பு, சனாதன இந்து தர்மத்தை நிலைநாட்டுவது உள்ளிட்ட அக்கறை கொண்டவர்களுக்கு மட்டுமே இவ்வளவு பெரிய கோயில் தேவஸ்தானத்தில் அறங்காவலர்களாக ஆந்திர அரசு நியமனம் செய்ய வேண்டும். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அரசியல் ஆதாயம், குற்றப் பின்னணி கொண்டவர்கள் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். இது முறையல்ல என்றும், அவர்களை நீக்க வேண்டும் என்று கோரியும் சிந்தா வெங்கடேஸ்வருலு என்பவர் நேற்று விஜயவாடாவில் உள்ள ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மனுவில், குற்றப்பின்னணி கொண்ட எம்.எல்.ஏ சோமினேனி உதய்பானு, கேதன் தேசாய், சரத் சந்திரா ரெட்டி ஆகியோரை உடனடியாக அறங்காவலர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என மனுதாரர் ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT