Published : 23 Dec 2017 09:26 AM
Last Updated : 23 Dec 2017 09:26 AM
வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருமலையில் 1400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இந்த 2 நாட்களில் சாமானிய பக்தர்களுக்கு 40 மணி நேரம் வரை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு நேற்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரும் 29, 30ஆகிய தேதிகளில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழா நாட்கள் வர உள்ளன. கடந்த ஆண்டு இந்த விசேஷ நாட்களில் 1.70 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். இந்த ஆண்டும் இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நேற்று மாலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, திருப்பதி எஸ்பி அபிஷேக் மொஹந்தி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு கூறியதாவது:
இம்முறை வைகுண்ட ஏகாதசி 29-ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அன்றைய தினம், மூலவருக்கு காலை ஏகாந்தமாக அபிஷேகம் நடத்தப்படும். அதன் பின்னர் காலை 5 மணி முதல் விஐபி பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். இவர்களை தொடர்ந்து காலை 8 மணி முதல் தொடர்ந்து சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 2 நாட்களில் 39 முதல் 40மணி நேரம் வரை சாமானிய பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோகர்பம் முதல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வரை 2.35 கி.மீ தூரம் வரை தற்காலிக க்யூ லைன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாராயணகிரி பகுதியில் 1.8 கி.மீ தூரம் வரையிலும் சிறப்பு வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 28-ம் தேதியே காலை 10 பத்து மணிக்கு பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக காம்ப்ளக்ஸ்களில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்படுவர். இந்த இரு நாட்களில் மட்டும் 1,400 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT