Published : 29 Aug 2023 07:37 PM
Last Updated : 29 Aug 2023 07:37 PM
புதுடெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசின் முடிவை பெண்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அசாமைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், "வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், "இது நல்ல முடிவு. சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தால் அது மிகவும் நல்லது. ஏனென்றால் குடும்பத்தை நடத்துவது கடினமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
"சமையலறைச் செலவுகளில் ரூ.200 எங்களால் சேமிக்க முடிகிறது என்றால் நிச்சயம் பெண்கள் அதை நேர்மறையாகத் தான் பார்ப்பார்கள். ஏனெனில் ஏதோ ஒரு வழியில் எங்களின் செலவு குறைக்கப்படுகிறது" என்று ராஞ்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பெண் ஒருவர், "பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவு. மேலும் விலையைக் குறைக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவு: முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT