Published : 29 Aug 2023 04:47 PM
Last Updated : 29 Aug 2023 04:47 PM

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடிபயனாளிகள் உள்ளனர். மேலும், 75 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ. 200 ரூபாய் குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது மேலும், ரூ. 200 குறையும். அந்த வகையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ. 400 குறையும்" என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தக்கூடிய விழா ரக்ஷா பந்தன். சிலிண்டர் விலைக் குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு சகோதரிக்கும் கூடுதல் சவுகரியத்தைத் தரும். அவர்களது வாழ்க்கை மேலும் எளிதாகும். எனது ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே கடவுளிடம் நான் வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்மூலம், 14.2 கிகி எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்கப்படும். டெல்லியில் ஒரு சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,103 ஆக உள்ளது. இது ரூ. 903 ஆக குறைக்கப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 33 கோடி பயனாளிகள் பயனடைவார்கள். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்படுத்தி வரும் 9.6 கோடி பயனாளிகளுக்கு ஏற்கனவே, ரூ. 200 மாநியம் வழங்கப்பட்டு வருவதால் தற்போது அவர்கள் வாங்கும் சிலிண்டரின் விலையில் ரூ. 400 குறையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x