Published : 29 Aug 2023 07:54 AM
Last Updated : 29 Aug 2023 07:54 AM
திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி தென்துருவத்தில் தரையிறங்கியது. பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகின்றன.
லேண்டர், ரோவரின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் கூறியதாவது:
நிலவின் மிகச் சிறந்த, தெளிவான புகைப்படங்களை நாம் பெற்றிருக்கிறோம். வேறு எந்த நாட்டிடமும் இதுபோன்ற புகைப்படங்கள் கிடையாது. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் நல்ல நிலையில் உள்ளன. மிகச் சிறப்பாக ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. நிலவில் ஒரு பகல் என்பது பூமியின் 14 நாட்களுக்கு இணையானது.
நிலவில் பகல் நேரம் தொடங்கிய கடந்த 23-ம் தேதி விக்ரம் லேண்டர் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதன்படி செப்டம்பர் 3-ம் தேதி வரை லேண்டரும் ரோவரும் ஆய்வு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.
இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையம் (எஸ்ஏசி) அகமதாபாத்தில் உள்ளது. இந்த மையத்தின் இயக்குநர் நிலேஷ் தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது: பிரக்யான் ரோவர் மூலம் ஒவ்வொரு நாளும் 30 மீட்டர் தொலை வுக்கு நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வினை நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் நிலவின் கடினமான மேற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தற்போது நாளொன்றுக்கு 12 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ரோவரை நகர்த்த முடிகிறது.
லேண்டர் மூலம் நிலவின் அயனி உமிழ்வு, பிளாஸ்மா குறித்து ஆய்வு நடத்தி உள்ளோம். நிலவின் பகல் நேரம் முடிவதற்குள் ஏற்கெனவே திட்டமிட்ட அனைத்து ஆய்வுகளையும் நடத்தி முடிக்க தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். செப்டம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு நிலவில் இரவு நேரம் தொடங்கும். அப்போது நிலவின் வெப்பநிலை மைனஸ் 120 முதல் மைனஸ் 150 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த கடும் குளிரை லேண்டரும் ரோவரும் தாங்கி மீண்டும் செயல்படத் தொடங்கினால் இந்தியாவுக்கு வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு நிலேஷ் தேசாய் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT