Published : 29 Aug 2023 05:18 AM
Last Updated : 29 Aug 2023 05:18 AM
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏலம் விட வேண்டிய பொருட்களின் பட்டியல் பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்டப் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ஏலம் விட வேண்டிய பொருட்களின் பட்டியலை அளிக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தின கற்கள், முத்து, பவளம், புடவை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலை அரசு வழக்கறிஞர் ஜாவலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, “வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட விவரங்களை 31-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT