Published : 29 Aug 2023 05:39 AM
Last Updated : 29 Aug 2023 05:39 AM
கொல்கத்தா: பிரச்சார நடவடிக்கைகளில் பாஜக தீவிரம் காட்டி வருவதால் வரும் டிசம்பர் மாதத்திலேயே மக்களவைத் தேர்தல் வரலாம் என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டிஎம்சி இளைஞர் பாசறை பேரணியில் திங்கள்கிழமை பங்கேற்ற மம்தா பானர்ஜி கூறியதாவது. வேறு எந்த அரசியல் கட்சியும் பிரச்சாரம் செய்ய முடியாதபடி அனைத்து ஹெலிகாப்டர்களையும் பாஜக தற்போதே முன்பதிவு செய்துள்ளது. இதன் மூலம், அந்த கட்சி தீவிரமான பிரச்சாரத்தில் களமிறங்கவுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே, வரும் டிசம்பரிலேயே மக்களவைக்கு தேர்தல் வரலாம் என்பது என்னுடைய கணிப்பு.
மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் அது சர்வாதிகாரத்துக்கு வழிகோலும். நம்முடைய தேசத்தை அந்த கட்சி சமூகங்களுக்கிடையில் பகைமையின் தேசமாக மாற்றிவிட்டது. எனவே, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நமது நாட்டை வெறுப்புணர்வு நிறைந்த தேசமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை.
இது, விரைவில் தேர்தல் வரப்போவதையே காட்டுகிறது. மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளாக கோலோச்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டினேன். இப்போது மக்களவை தேர்தலிலும் பாஜகவை தோற்கடிப்பேன்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வன்முறை கோஷங்களை எழுப்பிய ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககாவல் துறைக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதுபோன்ற கோஷங்களை எழுப்பியவர்கள் இது உத்தர பிரதேசம் அல்ல மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT