Published : 29 Aug 2023 05:45 AM
Last Updated : 29 Aug 2023 05:45 AM
புதுடெல்லி: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கவே நான் விரும்பினேன். இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மாற எனக்கு ஆசை இல்லை என்று பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இதன் முதல் கூட்டம், பிஹார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம் தேதியும், 2-வது கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளிலும் நடைபெற்றது. அடுத்த கூட்டம், வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்த பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:
மும்பையில் நடைபெற உள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியின் வியூகம் குறித்து விவாதிக்கப்படும். தொகுதி பங்கீடு உள்பட தேர்தல் தொடர்பான விவரங்களும் ஆலோசிக்கப்படும். கூட்டணியின் இதரசெயல்திட்டங்கள் இறுதி செய்யப்படும். அந்த கூட்டத்தின்போது, கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் இணையும்.
கூட்டணியில், எவ்வளவு அதிகமான கட்சிகளை சேர்க்க முடியுமோ, அவ்வளவு கட்சிகளை சேர்க்க விரும்புகிறேன். அந்த திசையில்தான் எனது பயணம் இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கவே நான் விரும்பினேன். மற்றபடி இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மாற எனக்கு எந்த ஆசையும் இல்லை.
மும்பை கூட்டத்தின்போது இண்டியா கூட்டணியின் கூட்டு அறிக்கை வெளியிடப்படும். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பதை ஒருமனதாகத் தேர்வுசெய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் கட்சிகளை ஒருங்கிணைத்ததற்காக நிதிஷ் குமாருக்கு கூட்டணியில் மிகப்பெரிய பொறுப்புவழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு: இண்டியா கூட்டணியில் உள்ளகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தவும் 3 அல்லது 4 மாநிலங்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க கூட்டணித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மும்பை கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது.
ஒருவேளை இண்டியா கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டால், முதல்வர் பதவியை தற்போது துணை முதல்வராக பதவி வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT