Published : 28 Aug 2023 07:24 PM
Last Updated : 28 Aug 2023 07:24 PM

நாட்டுக்கு மிகப் பெரிய செய்தியை 'இண்டியா'வின் ஆக.31 கூட்டம் வழங்கும்: காங்கிரஸ்

மும்பை: மும்பையில் கூடவுள்ள 'இண்டியா' கூட்டணியின் கூட்டத்தில், நாட்டுக்கு மிகப் பெரிய ஒரு செய்தி வழங்கப்படவுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா'-வின் 3-வது கூட்டம் மும்பையில் வரும் 31-ம் தேதி கூடுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மகா விகாஸ் கூட்டணி மேற்கொண்டு வருகிறது. கூட்டம் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருபவர்களில் ஒருவரான மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோலி இன்று செய்தியாளர்களிடம் கூறிய: "ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் 'இண்டியா' கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மகா விகாஸ் அகாதி சார்பில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டம், நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை வழங்கவுள்ளது. இண்டியா கூட்டணியின் லோகோ வரும் 31-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக 'இண்டியா' கூட்டணியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோற்றுவித்துள்ளன. இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை பிகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் ஒருங்கிணைத்தார். இந்தக் கூட்டணியின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான சிவகுமார் ஒருங்கிணைத்தார். இந்த இரண்டாவது கூட்டத்தில்தான் கூட்டணிக்கு 'இண்டியா' என்ற பெயர் ஒருமனதாக வைக்கப்பட்டது.

'இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ் உள்பட தற்போது 26 கட்சிகள் உள்ளன. 'இண்டியா' கூட்டணியின் 3வது கூட்டத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்வாபிமணி ஷெட்கரி சக்தானா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், இந்தக் கூட்டத்தில் மொத்தம் 27 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் நடைபெற உள்ள 3-வது கூட்டத்தில், கூட்டணிக்கான துணைக் குழுக்களை அமைப்பது, மாநில அளவில் பொதுக் கூட்டங்களை நடத்துவது ஆகியவை குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 31 அன்று உத்தவ் தாக்கரே சார்பில் இரவு விருந்து வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x