Published : 28 Aug 2023 07:53 AM
Last Updated : 28 Aug 2023 07:53 AM
புதுடெல்லி: அறிவியல் அறிஞர்கள், முக்கிய பிரபலங்கள், ஊடக பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
குறைந்த செலவில் விண்வெளி திட்டங்களை நிறைவேற்றிக் காட்ட முடியும் என்ற இந்தியாவின் திறனை சந்திரயான்-3 திட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது. ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. அந்த திட்டத்துக்கு ரஷ்யா ரூ.16,000 கோடி செலவிட்டுள்ளது. ஆனால், சந்திரயான்-3 திட்டத்துக்கு இந்தியா வெறும் ரூ.600 கோடிதான் செலவிட்டது. ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு செலவிடும் தொகையைவிட, சந்திரயான்-3 திட்டத்துக்கு செலவு மிகவும் குறைவு. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும். சந்திரயான்-3 திட்டத்தைப் பொறுத்த வரையில் ஈர்ப்பு விசையை நாம் பயன்படுத்திக் கொண்டோம். பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்ற சந்திரயான்-3 விண்கலம் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி 20 முறை பூமியை சுற்றி வந்தது. ஒவ்வொரு முறையும் பூமியில் இருந்து உயரம் அதிகரிக்கப்பட்டது.
அதன்பின், பூமியின் புவியீர்ப்புவிசையில் இருந்து விலகி நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சந்திரயான்-3 விண்கலம் தள்ளிவிடப்பட்டது. அதன்பின், நிலவில் விண்கலம் தரையிறங்குவதற்கு முன் பல சாதனைகளை சந்திரயான்-3 படைத்தது.
விண்வெளி துறையில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு- தனியார் நிறுவன (பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் -பிபிபி) பங்களிப்புடன் விண்வெளி திட்டஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆராய்ச்சிக்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.36ஆயிரம் கோடி முதலீடு பெறப்படும். மத்திய அரசு ரூ.14 ஆயிரம் கோடி வழங்கும். அனைத்து திட்டங்களையும் அரசே செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை நாம் துடைத்தெறிய வேண்டும். ஏனெனில், வளர்ந்த நாடுகள் என்று இப்போதும் நாம் கூறும் நாடுகளில் எல்லாம் அரசு மட்டுமே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடுதான் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. உதாரணத்துக்கு அமெரிக்காவுக்காக நாசா நிறுவனம் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிறது என்றால்அந்த திட்டத்தின் பெரும்பாலான பங்களிப்பு தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து தான் பெறப்படுகின்றன.
இவ்வாறு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT