Published : 28 Aug 2023 05:56 AM
Last Updated : 28 Aug 2023 05:56 AM

நவீன சென்சார் கருவிகளின் உதவியுடன் நிலவின் வெப்பநிலையை அளவிட்டது லேண்டர்

சென்னை: நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்து அதன் விவரங்களை லேண்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது.

சில மணி நேரங்களுக்கு பிறகு, லேண்டரில் இருந்த ‘பிரக்யான்’ ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. லேண்டர், தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகின்றன.

இந்நிலையில், லேண்டரில் உள்ள சேஸ்ட் கருவி மூலம் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை ஆராயப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. அதன் விவரம்:

விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் (ChaSTE-Chandra's Surface Thermophysical Experiment) சாதனத்தின் முதல் ஆய்வு தரவுகள் கிடைத்துள்ளன. இந்த கருவி, நிலவின் மேற்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை ஆராய்ந்து வருகிறது. அதன்படி, நிலவின் தரைப் பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ. ஆழத்துக்கு துளையிட்டு, தனது சென்சார்கள் வாயிலாக வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த சேஸ்ட் சாதனம், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூட்டிணைப்பில் வடிவமைக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லேண்டர் மூலம் கிடைத்துள்ள விவரங்கள், வரைபடமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து கீழே செல்லச் செல்ல வெப்பநிலை மாறுபடுவது தெரியவந்துள்ளது. தரைப்பரப்பில் சராசரியாக 55 டிகிரியும், 8 செ.மீ. ஆழத்தில் மைனஸ் 10 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலையும் நிலவுகிறது.லேண்டர், ரோவரின் ஆய்வில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x