Published : 28 Aug 2023 08:21 AM
Last Updated : 28 Aug 2023 08:21 AM
உலகம் வியந்து பார்க்கிறது. இந்திய மக்கள் உற்சாகத்தில் திளைக்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாய் நிலவில் சாதனை படைத்து இருக்கிறது சந்திரயான்-3. நாம் எல்லாரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.
அதே சமயம், இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், அமோக வரவேற்பு, வாழ்த்துகளை நன்றியுடன் ஏற்றுக் கொண்டு, மென்மையாய் வெளிப்படுத்திய வெற்றிப் பெருமிதம் - சிறுவர், இளைஞர், பொறுப்பில் உள்ள பெரியவர்கள்… பின்பற்ற வேண்டிய ‘நயத்தக்க நாகரிகம்’.
ஆகஸ்ட் 23 மாலை சுமார் 5:30 மணிக்குத் தொடங்கி அடுத்த ஒரு மணி நேர நேரடி ஒளிபரப்பில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
இஸ்ரோ தலைவர், சந்திரயான் 3 திட்ட இயக்குநர், திட்ட ஒருங்கிணைப்பாளர் உட்பட இஸ்ரோவின் அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள்… எல்லாரும் அடுத்தடுத்து நெருக்கமாய் (இறுக்கமாய் அல்ல) அமர்ந்து இருக்கிறார்கள்.
இந்தக் காட்சியே நமக்கு ஒரு செய்திதான். பொதுவாக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர், ‘பெரிய நாற்காலியில்’ ‘கம்பீரமாக’ அமர்ந்து ‘பார்வை இடுவார்கள்’. இஸ்ரோவில் அப்படி இல்லை.
ஒரு சரித்திர சாதனை கண்முன் விரிகிற நேரம்.ஒருவருக்கொருவர் அணுக்கமாக அனுசரணையாக ஒரு குழுவாக அமர்ந்து பார்வை இட்டது - நமக்கெல்லாம் ஓர் இனிமையான அனுபவம்.
தொடக்கப் பள்ளிகளில் சிறுவர்கள் எப்படி.. ஒன்றாய் இணைந்து ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பார்ப்பார்களோ.. அப்படி இருந்தது அந்தக் காட்சி! நமது சிறுவர், இளைஞர்கள் இதனை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும்.
எத்தனை அரிய காரியமாக இருந்தாலும், அதில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் முக்கியபங்கு உண்டு. அத்தனை பேரும் சம பங்குதாரர்கள்; சம அளவில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிற இந்த அரிய காட்சியைப் பெரிய திரையில் ஒளிபரப்பி, மாணவர்களுக்கு இந்தச் செய்தியை விளக்கிச் சொல்ல வேண்டும்.
சந்திரயான் நிலவை நெருங்கிய ‘பயங்கரமான பதினைந்து நிமிடங்கள்..!’ நமக்கெல்லாம் படபடப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் இஸ்ரோசாதனையாளர்கள் யாரும் பதற்றத்துடன் இருந்ததாய்த் தெரியவில்லை. ஆர்வம், உற்சாகம்.. நன்றாகப் படிக்கிற ஒரு மாணவர், தேர்வு முடிவை எதிர்பார்ப்பது போன்ற நேர்மறை உணர்வு… ‘இது உண்மையா..? நமக்குத்தான் இப்படித் தோன்றுகிறதா..?’
வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், பல தொலைக்கட்சிகளுக்கு அடுத்தடுத்து பேட்டி அளித்துக் கொண்டு இருந்தார். அதில் ஒன்றில் நெறியாளர் இந்தக் கேள்வியை முன் வைத்தார் – ‘அந்த பதினைந்து நிமிடங்கள்… உங்களின் மனநிலை எப்படி இருந்தது.? உங்களின் இதயத் துடிப்பு எகிறி இருக்குமே…’ புன்முறுவலுடன் பதில் அளித்தார் – ‘சொன்னால் நம்பமாட்டீர்கள். எப்போதுமே எங்களுக்குப் பதற்றம் இருப்பது இல்லை.’ நம்பமுடியாமல் பார்த்தார் நெறியாளர். விளக்கினார் - ‘எதன் மீதும் உணர்ச்சிகரமான ஒட்டுதலை நாங்கள் வைத்துக் கொள்வதில்லை.’ தேர்வு எழுதவும், தேர்வு முடிவைக் கண்டும் அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்கிற அறியாமை நிலவுகிற சுழலில், இதை விடவும் அபாரமான செய்தி என்ன இருக்க முடியும்..?
தொடர்கிறார் இயக்குநர்: ‘எங்களின் பல பணிகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறோம். பணி நிறைவேறி விட்டது. நாளை காலையிலேயே அடுத்த பணியில் இறங்க வேண்டி இருக்கிறது’. இந்த அணுகுமுறைதான் இன்றைய அவசர தேவை.
‘வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற’ என்கிறது உலகப் பொதுமறை. (குறள்: 661)
‘எது வந்த போதும்’ நிலைகுலையாது, நிலையான மனதுடன் செயல்புரிபவனை ‘ஸ்தித பிரக்ஞன்’ என்று பாராட்டுகிறது பகவத் கீதை.
“மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்” (குமரகுருபரர் - நீதிநெறி விளக்கம்)
‘அவமதிப்பும் கொள்ளார்’ – கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி. எத்தனை அவமானங்கள், புகார்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும் அறிவியல் அறிஞர்கள் மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் இத்தனை கண்டுபிடிப்புகள் நமக்குக் கிடைத்து இருக்கின்றன. இந்த உயரிய நெறியைத் தம் வாழ்நாளில் கடைபிடித்துக் காட்டும் இஸ்ரோ அறிஞர்கள்தாம் இன்று இளைய தலைமுறையினருக்கு நாம் காட்ட வேண்டிய முன்னுதாரணங்கள்.
விண்கலன், நிலவில் இறங்கும் முன்னர் முக்கிய நான்கு கட்டங்கள். ஒவ்வொன்றையும் நமது விண்கலம் எளிதில் கடந்து செல்கிறது. ஒவ்வொரு முறையும், இஸ்ரோ அறிஞர்களின் மென்மையான கைதட்டல்… நிறைவாக விண்கலம் நிலவில் இறங்கி சாதனை படைக்கிறது. அப்போதும்… அதே கைதட்டல்.. ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவதும்… இரு விரல்களை உயர்த்தி சைகை செய்வதும்… அவ்வப்போது கைதட்டுவதும்…. இவ்வளவு தான்.!
ஒரு சிலர் மட்டும் பங்கு பெறும், சில நிமிட கேளிக்கை விளையாட்டுகளில் ‘வெற்றி’ பெற்றாலே எகிறி எகிறிக் குதித்து, ‘ஊ.. ஊ..’ என்று கூச்சலிட்டு அதகளம் செய்கிறவர்கள் மத்தியில், அறிவுலகம் வியந்து பேசும் சரித்திர சாதனையை நிகழ்த்தி விட்டு, இஸ்ரோ விஞ்ஞானிகள் காட்டிய அடக்கம் மென்மை, நாகரிகம் – இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம்.
“நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது” (குறள் 124)
நிறைகுடங்களின் மாண்பு, எந்த மலையை விடவும் உயர்ந்தது என்கிற செய்தி, சிறுவர், இளைஞர்களின் மனதில் ஆழப் பதிய வேண்டும். யாரும் பக்கம் பக்கமாய்ப் பேசிப் புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை; ’இஸ்ரோ காட்சி’ ஒன்றே போதும். மாணவர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிறைவாக, மென்மையான கைதட்டல் நாகரிகம்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிகளில், யாரையேனும் பாராட்டுவது எனில், எல்லாரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள். கூடுதல் பெருமை, மகிழ்ச்சி எனில், ‘நீண்ட கைதட்டல்’ கிடைக்கும். இதற்கு மேல், குதிப்பதோ கூச்சல் இடுவதோ இல்லை.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் ‘கைதட்டல்’ மட்டுமே பாராட்டுக்கான நாகரிக வெளிப்பாடு என்று ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. உடலிலும் உள்ளத்திலும் உடனடியாகப் புத்துணர்ச்சி ஏற்றும் கைதட்டல் மூலம், கைதட்டுவோர், கைத்தட்டு பெறுவோர், பொதுப் பார்வையாளர் உள்ளிட்ட எல்லாரும் ஒருசேர உற்சாகம் அடைகிறார்கள். கட்டுரைகள், புகழ்ச்சியுரைகள், விளம்பரங்கள் தராத நம்பிக்கையை மனமகிழ்ச்சியை, அங்கீகாரத்தைச் சில நொடிகளில் கைதட்டல் தந்து விடுகிறது.
முன்பெல்லாம் ஒவ்வொரு பள்ளியிலும் உடற்பயிற்சி ஆசிரியர், எவ்வாறு கைதட்ட வேண்டும் என்று மாணவர்களுக்குப் பயிற்சி தருவார்! கைதட்டல் இன்றி வேறு வகைகளில் பாராட்டுவதை / வாழ்த்துவதை, பள்ளி கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக பதாகைகள் தாங்கி வரவேற்றல், பாதங்களில் மலர் தூவுதல், பாராட்டுக் கவிதை, பேச்சு, நடனம் உள்ளிட்டவை கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும்.
‘சந்திரனுக்கு ராக்கெட் விட்டவங்களே அடக்கி வாசிக்கிறாங்க… பதவியின் பின்னால் அலைபவர்களுக்கு ஏன் இத்தனை அலட்டல்..?’ - நமது அறியாமைதான் காரணம்.
சந்திரயான் குழுவினரைப் பார்த்துத் தெளிவோம். வெற்றியில் குதிப்பதும் இல்லை; தோல்வியில் துவள்வதும் இல்லை என்பதை உறுதி செய்வோம்.
‘பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!” (கணியன் பூங்குன்றனார்)
இந்த நன்னெறியை நமக்குப் புகட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு - எழுந்து நின்று கைதட்டுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...