Published : 28 Aug 2023 08:27 AM
Last Updated : 28 Aug 2023 08:27 AM
புதுடெல்லி: அரிசிக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது.
நேற்று முன்தினம், புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீத வரி விதித்தது. இந்நிலையில், நேற்று பாஸ்மதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்துள்ளது. ஒரு டன் பாஸ்மதி அரிசிக்கான ஏற்றுமதி விலை குறைந்தபட்சமாக 1,200 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி 1,200 டாலருக்கு குறைவாக பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்ய முடியாது. பாஸ்மதி அரிசிஏற்றுமதியை குறைக்கும் நோக்கிலும் விலை உயர்வைதடுக்கவும் இந்தக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அரிசி உற்பத்தி பாதிப்பு: கடந்த சில வாரங்களாக பெய்துவந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரிசி விலை உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசு, அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது.
சென்ற மாதம் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. இதனால் அமெரிக்க மக்கள் அரிசியை வாங்க கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது புழுங்கல் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்திருப்பதால் சர்வதேச சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...