Published : 28 Aug 2023 08:48 AM
Last Updated : 28 Aug 2023 08:48 AM
திருவனந்தபுரம்: நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என்று பெயரிட்டதில் எந்த தவறும் இல்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 லேண்டர் கடந்த 23-ம் தேதி தரையிறங்கியது. இந்த திட்டத்தின் வெற்றியில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பை போற்றும் வகையில் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி மையம் என்று பெயர் சூட்டப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களில் சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே சாவடிநடை பகுதியில் உள்ள பவுர்ணமி காவு பத்திரகாளி அம்மன் கோயிலில் நேற்று வழிபாடு நடத்திய இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம், சிவசக்தி மையம் பெயர் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
நான் அறிவியலையும் ஆன்மிகத்தையும் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறேன். இதில் அறிவியல் வேறு, ஆன்மிகம் வேறு. இரண்டையும் ஒன்றாக இணைக்கக்கூடாது. நிலவின் தென்துருவத்தில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்துள்ளன. இதில் நூலிழை தவறு ஏற்பட்டால்கூட அந்த பகுதியில் லேண்டரை தரையிறக்க முடியாது. இந்த மாபெரும் சவாலில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். நிலவில் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என்ற பெயரிட்டதில் எந்த தவறும் இல்லை.
செவ்வாய், வீனஸ் கிரகங்களிலும் நம்மால் கால் பதிக்க முடியும். இதற்கு இந்திய விண்வெளி துறையில் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT