Published : 27 Aug 2023 04:50 AM
Last Updated : 27 Aug 2023 04:50 AM

ரூ.19,000 கோடியில் 5 உதவி போர்க்கப்பல்கள்: எச்எஸ்எல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம்.

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்கள் தயாரிக்க எச்எஸ்எல் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகின் வலிமையான கடற்படையை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 7-வது இடத்தில் இருக்கிறது. சீனாவிடம் தற்போது 350 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உள்ளன. இந்தியாவிடம் 137 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் உள்ளன. அமெரிக்கா, சீனாவுக்கு நிகராக இந்திய கடற்படையை வலுப்படுத்த மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டுக்குள் கடற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்களை தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (எச்எஸ்எல்) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த உதவி போர்க் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள எச்எஸ்எல் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளன. போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், உணவுப் பொருட்கள், குடிநீர், வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல உதவி போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும். இதன்மூலம் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமல் நீண்ட காலத்துக்கு கடலிலேயே முகாமிட்டிருக்க முடியும்.

புதிதாக தயாரிக்கப்படும் 5 உதவி போர்க்கப்பல்களிலும் எதிரிகளின் கப்பல்கள், நீர்மூழ்கிகளை தகர்க்கும் அதிநவீன ஏவுகணைகள், அதிநவீன ரேடார் கருவிகளும் பொருத்தப்பட உள்ளன.

இந்த 5 உதவி போர்க்கப்பல்களால் இந்திய கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும். அதோடு இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களை மீட்கவும் உதவி போர்க்கப்பல்களை பயன்படுத்த முடியும்.

விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்படும் உதவி போர்க்கப்பல்கள் தலா 44,000 டன் எடை கொண்டதாக இருக்கும். அடுத்த 8 ஆண்டுகளுக்குள் கடற்படையிடம் 5 உதவி போர்க்கப்பல்களும் ஒப்படைக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x