Published : 27 Aug 2023 05:11 AM
Last Updated : 27 Aug 2023 05:11 AM

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 24 புதிய உறுப்பினர் நியமனம்

கோப்புப்படம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 24 புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி ஏற்கெனவே நியமிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி பதவியேற்றார். இதையடுத்து அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான பரிசீலனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை ஆந்திர அரசு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னையை சேர்ந்த டாக்டர் எஸ்.சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கர்நாடகாவிலிருந்து எம்எல்ஏக்கள் விஸ்வநாத் ரெட்டி, விஷ்வநாத் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுபோல் தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் ஆந்திர இந்து சமய அறநிலைத் துறை சார்பில் முதன்மை செயலாளர், ஆணையர் மற்றும் திருப்பதி நகர வளர்ச்சி கழக தலைவர், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆகியோர் சிறப்பு உறுப்பினர்களாக பதவி வகிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பின்னணி சர்ச்சை: இந்நிலையில், குற்றப்பின்னணி கொண்டவர்கள் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.விஜயசாய் ரெட்டியின் மருமகனும் அரபிந்தோ குழுமத்தின் இயக்குநருமான சரத் சந்திரசேகர ரெட்டி இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இவர் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதானவர். 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு, இவர் அப்ரூவர் ஆனதால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வரும் தேர்தலில் சீட் கேட்டவர்களில் தர முடியாத சிலருக்கும் முதல்வர் ஜெகன் அறங்காவலர் குழுவில் இடம் அளித்துள்ளார்.

கடந்த அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் கேதன் தேசாய்க்கு மீண்டும் இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் எம்சிஐ தலைவராக இருந்தபோது, இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக இவரை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில் குற்றப் பின்னணிகொண்டவர்களை புனிதமான திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் எப்படி சேர்க்கலாம் என பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா, காங்கிரஸ் என அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x