Published : 26 Aug 2023 05:41 PM
Last Updated : 26 Aug 2023 05:41 PM
புதுடெல்லி: சோதனை விண்வெளிப் பயணம் அக்டோபரில் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், "கரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஆளில்லா சோதனை விண்வெளிப் பயணம் முயற்சி செய்யப்படும். அதற்கு அடுத்ததாக, பெண் ரோபோ "வியோமித்ரா" விண்வெளிக்கு அனுப்பப்படும். இதனைத் தொடர்ந்தே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்படும். விண்வெளி வீரர்களை அனுப்புவது போலவே அவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் முக்கியம்" எனத் தெரிவித்தார்.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், "சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற வேண்டும் என்ற பதற்றம் எங்களுக்கு இருந்தது. இஸ்ரோ குழுவும் நானும் பதற்றத்துடனேயே இருந்தோம். சந்திரயான்-3, பூமியின் சுற்றுப்பாதையை விட்டு சந்திரனின் சுற்றுப்பாதைக்கு சென்றபோது எனக்கு முதல் பதற்றம் ஏற்பட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து, லேண்டர் மென்மையாக தரையிறங்கியது. சந்திரயான்-3ன் வெற்றி இந்திய விண்வெளி துறைக்கு மிகப் பெரிய உயரத்தை அளித்துள்ளது" என கூறினார்.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்பதும், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு நிலவுக்கு வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT