Published : 26 Aug 2023 02:27 PM
Last Updated : 26 Aug 2023 02:27 PM
பெங்களூரு: “நான் எப்போது பெங்களூருவுக்கு செல்வேன் என்று தெரியாததால், என்னை வரவேற்க விமான நிலையம் வர வேண்டாமென்று முதல்வர் மற்றும் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன்” என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்கி அத்திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக சனிக்கிழமை காலை பெங்களூரு சென்றடைந்தார். அப்போது மரபுப் படி பிரதமரை வரவேற்பதற்காக மாநில முதல்வர் சித்தராமைய்யாவோ, துணை முதல்வர் சிவகுமாரோ விமான நிலையத்தில் இல்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, மிகப் பெரிய மரபு மீறலாக பெங்களூரு வந்த பிரதமரை விமான நிலையம் சென்று வரவேற்க தடை விதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ் கேள்வி: காங்கிரஸின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அவருக்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது பிரதமர் எரிச்சலடைந்துள்ளார். அதனால் மரபுகளையும் மீறி விமான நிலையம் வந்து வரவேற்க முதல்வருக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது அற்பத்தனமான அரசியலன்றி வேறொன்றுமில்லை.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், கடந்த 2008 அக்.22-ஆம் தேதி சந்திரயான் 1 திட்டம் வெற்றியடைந்தபோது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துக்குச் சென்று விஞ்ஞானிகளைப் பாராட்டியதை இன்றைய பிரதமர் மோடி மறந்து விட்டார?" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் விளக்கம்: இந்தநிலையில், பெங்களூரு விமான நிலையத்தின் முன்னால் இருந்த மக்கள் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி, “விஞ்ஞானிகளை சந்தித்துவிட்டு செல்ல இருப்பதால் என்னை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளுநரிடம் அவ்வளவு சீக்கிரம் என்னை வரவேற்க வந்து சிரமப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். நான் எப்போது பெங்களூரு வந்தடைவேன் என்று எனக்குத் தெரியாது என்பதால் மரபுகளைத் தவிர்க்குமாறு கூறினேன்" என்று தெரிவித்தார்.
சிவகுமார் பேச்சு: இந்த சர்ச்சைக்கு மத்தியில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், "நானோ அல்லது முதல்வரோ எந்த நேரத்திலும் சென்று அவரை (பிரதமர்) வரவேற்க தயாராக இருந்தோம். ஆனால், பிரதமரின் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வ தகவல் வந்ததால் அதனை மதிக்க விரும்பினோம். வேறெந்த அரசியலும் இதில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இன்று பெங்களூரு திரும்பி, அங்குள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி பாயின்ட்' (Shiv Shakti Point') எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன் விவரம்: நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்துக்குப் பெயர் 'சிவசக்தி' - பிரதமர் மோடி அறிவிப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 24 Comments )
வெற்றி பெற்றவுடனேயே தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அப்புறம் என்ன
0
0
Reply
ஒரு நாட்டின் பிரதமர் தனது நாட்டிற்கு வந்து சேருவது நேரம் அவருக்கு தெரியாதாம்!? என்ன ஒரு ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்!
9
0
Reply