Published : 26 Aug 2023 10:57 AM
Last Updated : 26 Aug 2023 10:57 AM

ஒரு ஆசிரியர் செய்யக்கூடாத இழி செயல் - உ.பி. சம்பவத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்

ராகுல் காந்தி | கோப்புப் படம்.

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவரை ஆசிரியர் மத ரீதியாக விமர்சித்ததோடு சக மாணவரை ஏவி கன்னத்தில் அறையச் செய்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அப்பாவிக் குழந்தைகளின் மனதில் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைப்பது, அதுவும் பள்ளி எனும் புனிதமான இடத்தை வெறுப்பை வர்த்தகம் செய்யும் சந்தையாக மாற்றுவது என்பது ஒரு ஆசிரியர் செய்யக்கூடாத உச்சபட்ச இழி செயலாகும்.
இது பாஜக ஊற்றிய அதே மண்ணெண்ணெய் தான். இதைக் கொண்டுதான் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பாஜக வெறுப்பைப் பரப்பியுள்ளது.

குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அவர்களுக்கு அன்பை போதிக்க வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை வீடியோவில் இருந்தது என்ன? முன்னதாக இணையத்தில் வைரலான வீடியோவில், த்ரபதி தியாகி என்ற ஆசிரியர் 2ஆம் வகுப்பு சிறுவனிடம் வாய்ப்பாடு சொல்லும்படி சொல்கிறார். அந்தச் சிறுவனால் அதனை சரியாகச் சொல்ல முடியவில்லை. உடனே சக மாணவனை எழுப்பி அந்தச் சிறுவனை கன்னத்தில் அறையச் சொல்கிறார். அந்தச் சிறுவன் அழும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினை சுட்டிக்காட்டி அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்ததாலே தான் இதுபோன்ற அந்தச் சமூக சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகக் கூறி அந்தச் சிறுவனை இன்னும் பலமாகத் தாக்கும்படி கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் தான் ராகுல் காந்தி இதனைக் கண்டித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x