Published : 26 Aug 2023 05:14 AM
Last Updated : 26 Aug 2023 05:14 AM
புதுடெல்லி: அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமங்களின் 24 விவகாரங்களை ஆய்வு செய்ததாகவும், அவற்றில் 22 விவகாரங்கள் மீதான ஆய்வு நிறைவு பெற்றுவிட்டதாகவும் செபி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்கள் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. மேலும், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபிக்கு உத்தரவிட்டது.
நீதிபதி சப்ரே தலைமையிலான குழு தங்கள் அறிக்கையை கடந்த மே மாதம் தாக்கல் செய்தது. இந்தச் சூழலில், விசாரணையை முழுமையாக நடத்தி முடிக்க செபி கூடுதல் அவகாசம் கோரியது. அதை ஏற்ற உச்ச நீதிமன்றம் செபிக்கு கால அவகாசத்தை ஆகஸ்ட் 14 வரை நீட்டித்தது.
இந்நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி செபி மனுதாக்கல் செய்தது. இந்நிலையில், விசாரணை கிட்டத்தட்ட நிறைவுபெற்றுவிட்டதாக செபி தெரிவித்துள்ளது.
இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 29-ம் தேதி விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT